Breaking News

தமிழ் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்! -நிலாந்தன்

ராஜபக்‌ஷ சகோதரர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதே தமிழ் பொது உளவியலின் பிரதான கூறாகக் காணப்படுகிறது. ஆனால், இதன் அர்த்தம் தமிழ் மக்கள் மைத்திரியை நம்புகின்றார்கள் என்பதல்ல. படித்த, நடுத்தர வர்க்கத் தமிழர்களைப் பொறுத்த வரை ஏதோ ஒரு மாற்றம் தேவை என்று எதிர்பார்க்கிறார்கள். 


ஆனால், இதன் அர்த்தம் மைத்திரி மாற்றத்தைக் கொண்டு வருவார் என்று அவர்கள் நம்புகிறார்கள் என்பதல்ல. மைத்திரி எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வருவார் என்ற கேள்விக்கு அவர்களில் பலரிடம் துலக்கமான பதில் இல்லை. தமிழ்ப் பொது உளவியலின் பெரும் போக்கைக் கருதிக் கூறின், தமிழ் மக்கள் அரசுக்கு எதிராக காணப்படுகிறார்கள் என்பதே சரி. இவ்விதம் அரசுக்கு எதிராக காணப்படும் வாக்குகள் அவற்றின் தவிர்க்கப்படவியலாத தர்க்கபூர்வ விளைவாக மைத்திரிக்கு ஆதரவாகவே விழும். கூட்டமைப்புக்கு உள்ள மிகச் சாதகமான அம்சம் இது. அதாவது, தமிழ் மக்கள் வாக்களிக்க வந்தால் அதில் பெரும்பாலானவர்கள் அரசுக்கு எதிராகவே வாக்களிக்கப் போகிறார்கள் என்பதுதான்.

அரசுக்கு எதிரான தமிழ்ப் பொதுக் கோபத்தை தமிழ் மக்களின் நோக்கு நிலையிலிருந்து ஒன்று திரட்டி தமிழ் தேசிய அபிலாசைகளை வெளிக்காட்டுவதற்கான ஒரு வாக்களிப்பாக இத்தேர்தலை தமிழ் மக்கள் கையாண்டிருந்திருக்கலாம். ஆனால், அதற்குக் காலம் கடந்துபோய்விட்டது. தமிழ் மக்கள் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தியிருந்திருந்தால் அது தமிழ் மக்களுக்கு ஆகக்கூடிய பட்ச தெரிவுகளைக் கொடுத்திருக்கும். அதன் மூலம் இத்தேர்தலை தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து ஒரு பொது வாக்கெடுப்பாகப் பயன்படுத்தியிருந்திருக்கலாம். 

இரு பிரதான சிங்கள வேட்பாளர்களையும் இரண்டாவது சுற்றுக் கணக்கெடுப்பில் தமிழ் மக்களில் தங்கியிருக்குமாறு செய்திருக்கலாம். இது தமிழ் நோக்கு நிலையிலிருந்து பேரம் பேசுவதற்குரிய ஆகக்கூடிய பட்ச வாய்ப்புக்களைக் கொண்டிருந்த ஒரு தெரிவு. இப்படியொரு தெரிவை முன்வைத்து தமிழ் மக்களைத் தூண்டியிருந்திருந்தால் ஆகக் கூடிய பட்ச வாக்களிப்பை உறுதி செய்திருந்திருந்திருக்கலாம். ஆனால், கூட்டமைப்பின் தலைமை அப்படியொரு தெரிவுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால், இத்தேர்தலை தமிழ் நோக்கு நிலையிலிருந்து கையாள்வதற்கு இருந்த ஆகக்கூடிய பட்ச வாய்ப்புக்கள் இல்லாது போய்விட்டன. இப்பொழுது அரசிற்கு எதிரான வாக்குகளை என்ன செய்வது என்றவொரு கேள்வி மட்டுமே மிஞ்சியிருக்கிறது.

ஆகக்கூடிய பட்ச வாய்ப்புக்களைக் கொண்டிருந்த ஒரு தெரிவைப் புறக்கணித்துவிட்டு மிகக் குறைந்தளவு வாய்ப்புக்களைக் கொண்ட ஒரு தெரிவை கூட்டமைப்பு ஏன் தேர்ந்தெடுத்தது? இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் கூட்டமைப்பு அதற்கான பதிலை பகிரங்கமாக கூறவில்லை. இத்தகையதொரு பின்னணியில் தமிழ் மக்கள் தங்களுடையதல்லாத ஒரு நிகழ்ச்சி நிரலின் கருவிகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம் கோட்டுபாட்டு ரீதியாக முடிவெடுத்திருக்கலாம். ஆனால், கோட்பாட்டு ரீதியான அத்தெரிவை நிராகரித்துவிட்டு உத்திபூர்வ ஒரு முடிவை கூட்டமைப்பு ஏன் எடுத்தது? கூட்டமைப்பே இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலை பகிஷ்கரிக்குமாறு கோரியது. அது ஒரு கட்சியின் அறிவிப்பாக மட்டுமே காணப்படுகிறது. அதை ஒரு வெகுசன விருப்பமாக வளர்த்தெடுப்பதற்குரிய வேலைத் திட்டம் எதுவும் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. தேர்தலை ஏன் பகிஷ்கரிக்க வேண்டும் என்பதை பத்திரிகையாளர் மாநாட்டில் மட்டும் சொன்னால் போதாது. அதை வெகுசன அபிப்பிராயமாக எப்படி மாற்றுவது என்று அந்தக் கட்சி சிந்திக்கவில்லை. மஹிந்தவுக்கு எதிரான வாக்குகளை மைத்திரிக்கு ஆதரவானதாக மடை மாற்றம் செய்வதைக் குறித்து கூட்டமைப்பு சிந்திக்கும் அளவிற்கு தேர்தலை ஏன் பகிஷ்கரிக்க வேண்டும் என்பதற்குரிய ஒரு விளக்கத்தை எப்படி வெகுசனமயப்படுத்துவது என்பது குறித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி சிந்திக்கவே இல்லை. அறிக்கைகளுக்கு அப்பால் அவர்களிடமும் செயல்பூர்வ அரசியல் இருப்பதாகத் தெரியவில்லை.

தேர்தலை பகிஷ்கரிக்கும் முடிவுகள் தமிழ் மக்களுக்கு புதியவை அல்ல. அதற்கொரு நீண்ட தொடர்ச்சி உண்டு. 1931ஆம் ஆண்டு ஹன்ரி பேரின்பநாயகமும் தேர்தலைப் பகிஷ்கரித்தார். அதன் விளைவு தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் உண்டு. ஆனால், படித்த சிங்கள நடுத்தர வர்க்கத் தலைவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோடு அரைகுறைத் தீர்விற்கு ஒத்துப் போகலாம் என்றிருந்த ஒரு பின்னணியில் ஹன்ரி பேரின்பநாயகம் அத்தகைய அரைகுறைத் தீர்வுகளை நிராகரித்தே தேர்தலை பகிஷ்கரித்தார். அந்நாட்களில் காந்தியின் செல்வாக்கிற்கு உட்பட்டு இந்தியாவில் காந்தி கோரிய சுயராட்சியத்தைப் போன்றதொரு தீர்வு இலங்கைத் தீவுக்கும் தரப்பட வேண்டும் என்று சிந்தித்தே அவர் அப்படி முடிவெடுத்ததாக அதற்கொரு விளக்கமும் உண்டு.

இது போன்ற மற்றொரு பகிஷ்கரிப்பின் பின் விளைவுகளைக் குறித்தும் சுட்டிக்காட்டப்படுகின்றது. 2005இல் விடுதலைப்புலிகள் இயக்கம் எடுத்த முடிவே அது. அந்த முடிவின் விளைவாக புலிகள் இயக்கத்திற்கும் மேற்கு நாடுகளுக்குமிடையிலான உறவு சேதமடைந்தது. நாலாம் கட்ட ஈழப் போரில் அந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்டதற்கு அதுவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

பகிஷ்கரிப்பது என்பது வெகுசன அரசியலில் இருந்து விலகி நிற்பது அல்ல. அதை ஒரு பங்குகொள்ளும் அரசியலாக முன்னெடுக்கும்பொழுது அதன் மீதான விமர்சனங்கள் பலவீனமடைகின்றன. அதாவது, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது முடிவை தனது வாக்காளர்கள் மத்தியில் ஒரு பொதுசன அபிப்பிராயமாக வளர்த்தெடுத்திருந்தால் அக்கட்சியின் முடிவை யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை.

மகத்தான தலைமைகள் தீர்க்கதரினம் மிக்க முடிவுகளை எடுத்த பின் அந்த முடிவுகளை நோக்கி மக்கள் திரளை வளைத்தெடுக்கின்றன. ஆனால், அப்படிப்பட்ட வேலைத் திட்டங்கள எதுவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் இருப்பதாகத் தெரியவில்லை. இதுவும் கூட்டமைப்புக்குச் சாதகமான ஒரு அம்சம்தான்.

ஜனநாயக மரபுக்குரிய பாதுகாப்பு உத்தரவாதமாகக் கூறப்படுவது அங்கு கிரமமாக நடைபெற்றுவரும் தேர்தல்களே. இத்தேர்தல்களின்போது மாற்றத்திற்கு இடமளிக்கப்படுகின்றது. சராசரி வெகுசன மனோநிலை எனப்படுவது எப்பொழுதும் மாற்றத்தை நாடிச் செல்லும். அந்த மாற்றத்தின் உள்ளடக்கத்தைப் பற்றிய விளக்கமும் அது நீண்ட எதிர்காலத்தில் எத்தகைய பின் விளைவுகளைத் தரும் என்பது பற்றிய விளக்கமும் சமூகத்தின் அரசியல் தெளிவுடைய ஒரு பகுதியினர் மத்தியில்தான் விவாதிக்கப்படும். மாறாக வெகுசன மனோநிலை எனப்படுவது பெரும்பாலும் அலைகளின் பின் எடுபடுவதுதான். 

தமிழ் மக்கள் மத்தியில் மாற்றத்தை ஆதரிக்கும் பலரும் அப்படித்தான் காணப்படுகிறார்கள். இத்தகையதொரு பின்னணியில் தான் தமிழ்ச் சிவில் அமைப்புக்களும் துலக்கமான முடிவுகளை எடுக்க முடியாத ஒரு நிலை தோன்றியது. அண்மையில் தமிழ் சிவில் அமையம் வெளியிட்டிருந்த அறிக்கையானது அதன் இறுதிப்பகுதியில் இராஜதந்திர சொற் பிரயோகங்களைக் கொண்டிருந்ததை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

மைத்திரியை ஏன் தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்பதற்கு கூட்டமைப்பிடமும் போதிய பதில்கள் இல்லை. கொழும்பில் நடந்த ஊடக மாநாட்டில் கூட்டமைப்புத் தெரிவித்த கருத்துக்கள் முழுக்க முழுக்க பொது எதிரணியின் நிகழ்ச்சி நிரலை அப்படியே பின்பற்றுவனவாகத்தான் காணப்பட்டன. மைத்திரியின் எழுச்சியானது சிங்கள மக்களைப் பொறுத்த வரையில் ஏதும் மாற்றங்களைக் கொண்டு வரலாம். கொழும்பில் திறந்த பல்கலைக்கழகத்தில் புத்தாண்டு வாழ்த்துக்கூறிய பலரும் “புத்தாண்டு வாழத்துக்கள்” என்று கூறுவதற்குப் பதிலாக “எதிர்காலத்துக்கான புத்தாண்டு வாழத்துக்கள்” என்று வாழ்த்தினார்களாம். சிங்கள மக்களின் நோக்கு நிலையிலிருந்து பார்த்தால் அது மாற்றமாகத் தோன்றக் கூடும். ஆனால், தமிழ் மக்களின் நோக்கு நிலையிலிருந்து பார்த்தால், குறிப்பாக தூரநோக்கு நிலையிலிருந்து பார்த்தால் அது அதன் மெய்யான பொருளில் மாற்றமாக அமையுமா?

பொது எதிரணியின் தேர்தல் அறிக்கையை வைத்துக்கூறின், அதில் தமிழ் மக்களுக்கு ஒரு மாற்றமும் கிடையாது. மைத்திரி கொண்டுவரக்கூடிய சிவில் வெளி கூட இராணுவ மயநீக்கம் செய்யப்பட்டதாக இருக்கப்போவதில்லை. ஏனெனில், இராணுவ மயநீக்கம் செய்யப்பட்ட ஒரு சிவில் வெளிக்குள் வெகுசன இயக்கங்கள் வீறுகொண்டு எழும். இதன் முதற்பலி கூட்டமைப்பாகவே இருக்கும். எனவே, கூட்டமைப்பைப் பாதுகாப்பதற்கும் தமிழ் மக்கள் அதன் மெய்யான பொருளில் வெகுசன அமைப்புக்களை கட்டியெழுப்புவதைத் தடுப்பதற்கும் ஒரு கட்டத்திற்கு மேல் தமிழ் சிவில் வெளியை இராணுவ மயநீக்கம் செய்யக்கூடாது என்றே எல்லாச் சிங்களத் தலைவர்களும் சிந்திப்பார்கள். கூட்டமைப்பும் அப்படித்தான் சிந்திக்கும்.

இப்படிப் பார்த்தால், தமிழ் மக்களின் நோக்கு நிலையிலிருந்து ஒரு சிவில் வெளி அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அருந்தலாகவே தெரிகின்றன. ஆனால், தமிழ் மக்களின் பொருளாதார வாழ்வைப் பொறுத்த வரை இப்பொழுது இருப்பதைவிடவும் அதிகரித்த அளவில் ஒரு செழிப்பு உருவாகியதுபோல ஒரு தோன்றம் உருவாகும். ஏனெனில், பொது எதிரணி வென்றால் அது மேற்கு நாடுகளின் வெற்றிதான். எனவே, புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும், தாயகத்திற்குமிடையிலான பொருளாதார இடையூடாட்டம் அதிரிக்கும். மேற்கின் முதலீடுகளும் அதிகரிக்கும். இப்பொழுது இருப்பதைவிடவும் பலமானதொரு நுகர்வு அலை தோற்றுவிக்கப்படும். இதனால், தமிழ் பகுதிகளின் பொருளாதாரச் செழிப்பு அதிகரித்தது போல ஒரு தோற்றம் உருவாகும். ஆனால், இதுகூட தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை, அவர்களுடைய எதிர்ப்புணர்வை நீண்ட எதிர்காலத்தில் நீர்த்துப்போகச் செய்வதற்கே உதவும்.

எனவே, இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகவோ அல்லது போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாகவோ அல்லது இராணுவ மயநீக்கம் தொடர்பாகவோ துலக்கமான வாக்குறுதிகள் எவையும் அற்ற ஒரு பின்னணியில் பொது எதிரணி கொண்டு வரக்கூடிய மாற்றங்கள் எவையும் தமிழ் மக்களின் தேசிய இருப்பை நீண்ட எதிர்காலத்தில் நீர்த்துப்போகச் செய்பவைகளாகவே காணப்படுகின்றன. இப்படிப் பார்த்தால் பொது எதிரணி சார்பாக கூட்டமைப்பானது தமிழ் மக்களுக்கு எத்தகைய வாக்குறுதிகளையும் வழங்க முடியாது.

இத்தகையதொரு பின்னணியில் கூட்டமைப்பானது பொது எதிரணியை கோட்பாட்டு ரீதியாக ஆதரிக்கவே முடியாது. உத்தி ரீதியாக மட்டுமே ஆதரிக்கலாம். அப்படியொரு உத்திபூர்வமானதொரு முடிவை எடுத்தால் அதை கோட்பாட்டாக்கம் செய்ய முற்படக்கூடாது. கொழும்பில் நடந்த ஊடகவியாளர் மாநாட்டில் அப்படி கோட்பாட்டாக்கம் செய்ய முற்பட்டதின் விளைவாக கூட்டமைப்பானது தமிழ் தேசிய நோக்கு நிலையிலிருந்து விலகி முழு இலங்கைக்குமான தேசிய நோக்கு நிலையை எடுக்கவேண்டியதாயிற்று. சிங்கள மக்களுக்குரிய மாற்றத்தையே தமிழ் மக்களுக்கும் உரியதாக மாறாட்டம் செய்ய வேண்டியதாயிற்று. இப்படியயொரு மாறாட்டத்தோடு தமிழ் மக்களுக்கு துலக்கமான வாக்குறுதிகளை வழங்க அவர்களால் முடியுமா? மனோ கணேசன் அளவிற்குக்கூட வெளிப்படையாகக் கருத்துக் கூற கூட்டமைப்பால் முடியவில்லை. பொது எதிரணி உருவாகிய புதிதில் மனோ கணேசன் சொன்னார், பொது எதிரணி வென்றால் நாட்டில் பாலும் தேனும் ஓடும் என்று தான் கூறப்போவதில்லை என்று.

கூட்டமைப்பு மைத்திரியை ஆதரிப்பது என்று ஓர் உத்திபூர்வ முடிவை எடுத்தால் அதைப் பகிரங்கப்படுத்துவதையும் உத்திபூர்வமாக தவிர்த்திருந்திருக்கவேண்டும். தேர்தலுக்கு எட்டு நாட்களே இருந்த ஒரு பின்னணியிலும் பரப்புரைகள் முடிவதற்கு ஐந்து நாட்களே இருந்த ஒரு பின்னணியிலும் தமது முடிவை அறிவித்ததன் மூலம் சிங்களக் கடும் கோட்பாளர்களை அரசை நோக்கி மேலும் தள்ளக்கூடாது என்று அவர்கள் முன்னெச்சரிக்கையோடு சிந்தித்திருக்கலாம். பரப்புரைகள் முடிவதற்கு ஐந்து நாட்களுக்கு முன் அறிவித்தன் மூலம் தீவிர பரப்புரைகளைத் தவிர்க்கும் ஓர் உள்நோக்கம் இருந்திருக்கலாம். ஆனால், இங்கேயும் சில கேள்விகள் உண்டு. போதியளவு பரப்புரைகள் இல்லையென்றால் தமிழ் மக்கள் அலை அலையாகச் சென்று வாக்களிக்கப்போவதில்லை. பெருமெடுப்பிலான வாக்களிப்பு இல்லையென்றால் தமிழ் மக்களின் வாக்குகள் பொது எதிரணியின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியைக் கொண்டிருக்கப்போவதில்லை. ஆயின், வெளிப்படையாக அறிவித்தன் பலன் தான் என்ன?

மறுவளமாக இவ் அறிவிப்பு காரணமாக தென்னிலங்கையில் ஒரு தொகுதி ஊசலாட்ட வாக்குகள் அரசை நோக்கி தள்ளப்பட்டிருப்பதாக ஒரு தகவல் உண்டு. அந்த விகிதம் அரசு எதிர்பார்க்கும் விகிதத்தைவிட குறைவானதே என்றும் ஒரு தகவல் உண்டு. அதேசமயம், சிங்கள உட் கிராமங்கள் தோறும் அரசு வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்பரப்புரையானது பெருமளவிற்கு இனவாதத் தன்மை மிக்கதாகவே காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இப்படிப் பார்த்தால் கூட்டமைப்பின் அறிவிப்பானது பொது எதிரணிக்கு எதிர்பார்க்கப்படும் வாக்குகளைப் பெற்றுத் தரவில்லையென்றால் அதன் எதிர் விளைவுகளே அதிகமாய் இருக்கும். அதாவது, இறுதியிலும் இறுதியாக அது அரசிற்கே சேவகம் செய்யும். மைத்திரிக்கு ஆதரவாக அறிவித்ததன் மூலம் பொது எதிரணியின் பக்கம் நின்றது போலவும் இருக்கும். 

அதே சமயம் அந்த அறிவிப்பை மிகப் பிந்தி அறிவித்தன் மூலமும் குறுகிய கால பிரசாரத்தையே முன்னெடுத்ததன் மூலமும் மைத்திரியின் வெற்றிக்கு அதிகரித்த அளவில் உதவ முடியாது போகலாம். அதோடு அந்த அறிவிப்பின் மூலம் சிங்கள கடும் கோட்பாளர்களில் ஒரு பகுதியினரை அரசை நோக்கி தள்ளியதாகவும் முடியலாம். இது மறைமுகமாக மஹிந்தவிற்கு உதவி செய்தது போலவும் இருக்கும். ஆக மொத்தம் பூனை இப்பொழுதும் மதில் மேல் தான் இருக்கிறது. ஆனால், மைத்திரியின் பக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இது அரசிற்கு எதிரான தமிழ் மக்களின் கோபத்தை துஷ்பிரயோகம் செய்வதில் முடியாதா?

நன்றி தினக்குரல்