Breaking News

திருப்பியனுப்பப்பட்டார் மேர்வின் சில்வா

பொது எதிரணியில் இணைந்து மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்த நிலையில் அமைச்சர் மேர்வின் சில்வா திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.


தற்போதைய நிலையில் அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் தொலைபேசிகளும் ஒட்டுக்கேட்கப்படும் நிலையில் கடிதப் போக்குவரத்து மூலமாகவே கட்சிதாவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் பிரகாரம் சில நாட்களுக்கு முன்னதாக அமைச்சர் மேர்வின் சில்வாவும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தார்.

எனினும் அவரை இணைத்துக் கொள்வதற்கு அத்துரலிய ரத்ன தேரர் கடும் அதிருப்தி தெரிவித்ததையடுத்து மேர்வின் கடிதம் தொடர்பில் பதில் அனுப்பப்படவில்லை.இந்நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்னதாக மைத்ரியின் வீட்டுக்கு அதிகாலை வேளையொன்றில் மேர்வின் சில்வா நேரடியாக வந்திருந்த போதும் மைத்திரி அவரை சந்திக்காது திருப்பி அனுப்பியுள்ளார்.

இத்தகவல்களை நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டிருந்தார்.மேலும் எதிர்வரும் நாட்களில் குறைந்த பட்சம் ஐந்து முக்கிய அமைச்சர்கள் எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.