Breaking News

சங்கக்காரா இரட்டை சதம்: வலுவான நிலையில் இலங்கை

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குமார் சங்கக்காராவின் இரட்டை சதத்துடன் இலங்கை வலுவான நிலையில் உள்ளது. 


முதல் இன்னிங்சிற்காக பதிலளித்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 356 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு இலங்கை அணி கிரிக்கெட் சுற்றுப் பயணம் செய்துள்ளது. தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 69 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். மேலும் மற்றைய வீரர்கள் எவரும் அரைச்சதம் கூட கடக்காத நிலையில் வரிசையாக வெளியேற முதலாம் நாளான நேற்று அந்த அணி 221 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. 

இலங்கை சார்பில் அபாரமாக பந்துவீசிய நுவன் பிரதீப் 4 விக்கெட்டுக்களை சாய்த்தார். மேலும் சுரங்க லக்மால் 3 விக்கெட்டுக்களையும் தம்மிக்க பிரசாத் 2 விக்கெட்டுக்களையும் மேத்யூஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்காரா 203 ஓட்டங்களை விளாசினார். 

மேலும் தினேஷ் சந்திமால் 67 ஓட்டங்களை குவிக்க, போட்டியின் இரண்டாம் நாளான இன்று, 356 ஓட்டங்களுக்கு இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதன்படி இலங்கை 135 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்க, நியூசிலாந்து தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வருகிறது. குமார் சங்கக்கார சாதனை இந்தப் போட்டியின் சிறப்பம்சமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மிகக் குறைந்த இன்னிங்களில் 12,000 ஓட்டங்களை எடுத்து சங்கக்காரா புதிய சாதனையையும் புரிந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 12,000 ஓட்டங்களை எடுக்கும் ஐந்தாவது வீரர் இவராவார். 

தன்னுடைய 224 ஆவது இன்னிங்சில் அவர் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்துள்ள சச்சின் டெண்டுல்கரும், ரிக்கி பொண்டிங்கும் தம்முடைய 247 ஆவது இன்னிங்சில் தான் 12,000 ஓட்டங்களைக் கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தவிர இந்தியாவின் ராகுல் டிராவிட்டும் தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ்சும் 12,000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.