தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுக்கச் சதி
அடுத்தவாரம் நடக்கவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் பயமுறுத்தும், நடவடிக்கைக்கு சிறிலங்கா இராணுவத்தை, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பயன்படுத்துவதாக அனைத்துலக சமூகத்திடம் முறையிட்டுள்ளது எதிரணி.
எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து நேற்று கலதாரி விடுதியில், கொழும்பைத் தளமாக கொண்ட வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தனர்.இதன்போது, உரையாற்றிய, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன,
“யாழ்ப்பாணத்தில் மட்டும், 2000 சிறிலங்கா படையினர், சாதாரண உடையில், நிறுத்தப்பட்டுள்ளதாக, எமக்கு தகவல் கிடைத்துள்ளது.பொலன்னறுவவின் சில பகுதிகளுக்கும் கூட சிறிலங்கா படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.சில படைப்பிரிவுகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு விட்டன.
தேர்தலின் போது வாக்களிப்பைக் குழப்புவது குறித்து, படையினருக்கு ஏற்கனவே பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து அனைத்துலக சமூகத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். குறிப்பாக, வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க,
“வடக்கு, கிழக்கிலும், நாட்டின் ஏனைய சில இடங்களிலும், தேர்தல் செயல்முறைகளை குழப்பி, வாக்களிப்பைத் தடுப்பதற்கு, பயன்படுத்தப்படவுள்ள சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினர் தொடர்பான தகவல்கள், இராணுவத்தினரிடம் இருந்தே எமக்கு கிடைக்கிறது.
நாம் அவர்களுடன் நல்ல உறவை வைத்திருக்கிறோம்.ராஜபக்ச அரசாங்கம் அச்சமடைந்திருக்கிறது.சேவையில் உள்ள படை அதிகாரிகளுடன், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளனர்.முட்டாள்தனமாக எதையும் செய்யாதீர்கள் என்றே நாம் இந்த கனவான்களிடம் கேட்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.