மண்டபம் முகாமில் கருத்துக்கேட்பு – 70 வீதமான அகதிகள் இலங்கை திரும்ப விருப்பம்
தமிழ்நாட்டில், மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் பெரும்பான்மையோர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்புவதாக, அவர்களிடம் கருத்து அறியும் சந்திப்பை நடத்திய இந்திய நாடாளுமன்ற நிலையியல்குழு தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்ற நிலையியல் குழு, நேற்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பணியகத்தில் மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள அகதிகள் மற்றும் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த கருத்து அறியும் கூட்டம் ஒன்றை நடத்தியது.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,”தமிழ்நாட்டில் அகதிகள் முகாம்களில் வசிக்கும் அகதிகளில் 70 வீதமானோர் தமது சொந்த நாடான இலங்கைக்கு திரும்பிச் செல்லவே விரும்புகின்றனர்.
இதில் 20 வீதத்தினர் மட்டுமே தமிழகத்தில் தொடர்ந்து தங்கியிருக்க விரும்புகின்றனர்.மேலும் 10 வீதமானோர், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளித்தால் இலங்கைக்கு செல்லத் தயார் என்கின்றனர்” என்று தெரிவித்தார்.இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நாடாளுமன்ற நிலையியல் குழு உறுப்பினர்களான கே.டி.எஸ்.துளசி, ரஜனி பட்டேல், கலாநிதி அன்சுல் வர்மா, கலாநிதி சம்பத், வரபிரசாத் ராவ், பி.வி.நாயக். கே.பி.சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தற்போது தமிழ்நாட்டில், 1 லட்சத்து 2 ஆயிரத்து 55 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர்.அவர்களில் 64 ஆயிரத்து 924 பேர், 107 முகாம்களில் வசித்து வருகிறனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.