யாழில் நாளை முதல் 5 வீதிகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன
ஜனாதிபதித் தேர்தலின்போது யாழ்.மத்திய கல்லூரி வாக்கெண்ணும் நிலையமாக இயங்கவுள்ளதால் இந்தப் பகுதியிலுள்ள சில வீதிகள் மக்கள் போக்குவரத்துக்கு தடைசெய்யப்படுகின்றன என்று யாழ். மாவட்டப் பிரதி பொலிஸ்மா அதிபர் வைத்தியலங்கார தெரிவித்துள்ளார்.
இதன்படி, காந்தி வீதி(மணிக்கூட்டு வீதி), முதலாம் குறுக்கு வீதி, நீதிமன்ற வீதி, சுப்பிரமணியம் பூங்கா வீதி, புல்லுக்குளம் முதல் வேம்படி வரையான வீதி ஆகிய 5 வீதிகளே தற்காலிகமாக மூடப்படவுள்ளன. இந்த வீதிகள் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிமுதல் மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்துள்ளனர். இவற்றுக்கான மாற்றுப் பாதைகளாக வைத்தியசாலை வீதி, பிரதான வீதி, இரண்டாம் குறுக்கு வீதி, ஏ-9 வீதி என்பவற்றைய் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவைளை, தடைசெய்யப்படும் வீதிகளை அவசர தேவைக்காகப் பயன்படுத்துவோர் அதற்கான அனுமதியை யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேனவின் அனுமதியைப் பெறவேண்டும் எனவும் யாழ். பிரதி பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார். எனினும் அவருடன் தொடர்பு கொள்வதற்கான எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
யாழ். பொலிஸ் நிலையம் தடைசெய்யப்படும் வீதிக்குள் அடங்குகிறது. இதனால் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை செய்ய செல்வதில் நெருக்கடிகள் ஏற்படலாம். இதற்கான மாற்று நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் எதுவும் தெரிவிக்கவில்லை.