மினி பட்ஜெட்டினால் மக்களுக்கு 3 மடங்கு நன்மைகள் -அசாத்சாலி
உறுதிமொழி அளிக்கப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகளவான பொருட்களுக்கு இன்றைய வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்கப்படும் என மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத்சாலி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியாளர்கள் வீணாக செலவுசெய்த கோடிக்கணக்கான பணத்தை மீதப்படுத்தியே மக்களுக்கு வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலான நல்லாட்சிக்கான அரசு முன்னைய ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டுவந்த வீண் செலவுகளை தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த வீண்செலவுகளை சேமித்தே மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன.
ஊழல் மோசடிகள் செய்த முன்னாள் ஆட்சியாளர்களை ஏன் இதுவரை கைதுசெய்யவில்லையென மக்கள் எம்மிடம் கேட்கின்றனர். நாம் எவர் மீதும் எழுந்தமானமாக நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. அவர்களுக்கு எதிராக சட்டரீதியாக முறைப்பாடுகள் செய்து, நீதிமன்ற அனுமதியுடனேயே அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
எமக்கும், மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்து நாமும் மகிந்த ராஜபக்ச ஆகிவிட முடியாது. எமக்கு நாட்டில் அமைதியான, நல்லாட்சியொன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதே பிரதான இலக்காகும். சட்டம் சகலராலும் மதிக்கப்பட வேண்டும். முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு எனக் கூறிக்கொண்டு பொதுமக்கள் வீதியில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருந்தது.
இது தற்பொழுது முற்றாக மாறியுள்ளது. ஜனாதிபதியின் வாகனம் கூட வீதி சமிக்ஞைகளில் நின்றுதான் செல்கிறது. அந்தளவுக்கு நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகவியலாளர் சுதந்திரமாக செயற்பட முடியும். அரசை எவரும் சுதந்திரமாக விமர்சிக்கலாம். தொலைக்காட்சி நிறுவனங்கள், பத்திரிகை நிறுவனங்கள் மற்றும் வானொலிகள் தாக்கப்படாது. தீக்கிரையாக்கப்படாது. அந்தக் காலம் முடிவடைந்துவிட்டது.
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த தினம் பெப்ரவரி 4ஆம் திகதி அல்ல. ஜனவரி 8ஆம் திகதியே சுதந்திர தினமாகக் கொண்டாடப்பட வேண்டும். ஏகாதிபத்திய ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட தினமே உண்மையான சுதந்திரமான நாளாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.