போர் இன்னும் ஓயவில்லை! பகுதி-1
இலங்கையின் வரலாறு மங்கலாகத் தெரிய தொடங்கிய காலத்திலிருந்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடிய போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன.
இந்தக் கொடிய போர் எதற்கானதெனில், நிலத்துக்கானது. ஆனால் அந்த முற்றுப் புள்ளியிலிருந்து ஆரம்பமாகியது இன்னொரு போர். இது நிலத்துக்கானதல்ல. அதனையும் தாண்டியது.
அன்று கொல்லும் போரை மீறி எழுந்த நின்று கொல்லும் போர் இது. ஆம், தமிழர் வாழும் பகுதிகளில் இயற்கை நிலைகள் மீது வைக்கப்பட்டிருக்கிறது குறி. நீண்ட போர்ப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்ற நிலத்தில் அள்ள அள்ளக் குறையும் இயற்கை வளங்கள் மனிதக் கை படாமலேயே இருந்தன. அதில் மணல் முதன்மையானது.

எனவேதான் இலக்காகியது மணல். அதில் முதன்மையிடத்தைப் பெற்றுக்கொண்டது இந்தக் கிராமம். இலங்கையின் பண்டைய வரலாற்றைச் சொல்லும் கதைகளில் இயக்கர், நாகர் என்கிற இரு இனங்களைப் பற்றிய குறிப்பு வரும். அதாவது, இலங்கைக்கு விஜயன் இந்தியாவிலிருந்து வருகின்ற வேளையில் இங்கு சுதேச குடிமக்களாக இயக்கரும், நாகரும் வாழ்ந்தனர். அந்த இனத்திற்கு நூல் நூற்கும் தொழில் செய்யும் குவேனி தலைவியாக இருந்தாள், என்கிற கதை இலங்கை வரலாறு படித்த அனைவருக்குமே நினைவிருக்கலாம். அதில் நாகர் வழிவந்த இனத்தின் மிச்ச சொச்சங்களும், நாகர்களின் பண்பாட்டைப் பின்பற்றுகின்ற கலாசாரச் தொடர்புகளும் உள்ளதே நாகர்கோவில்.
ஆனால் போர் ஓய்வின் பின்னர் அந்த மணல் வியாபாரத்துக்குரியதானது. அப்போதிருந்த ஆளுங்கட்சியின் ஆசீர்வாதம் பெற்ற கட்சியொன்றின் நிதியம் இங்குள்ள மணலில் கண்வைத்தது. இரவு பகல் பாராது மணலை அள்ளிப் பணம் பார்த்தது. அவ்வப்போது மக்கள் கிளர்ந்தார்கள். துப்பாக்கிகளுக்கு முன்னால் எந்தக் குரலும் எடுபடவில்லை. ஆனாலும் தம்மைச் சூழ்ந்த, காத்த இயற்கையை கொன்றொழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.
அவர்களின்கோசங்களிலோ, வாழ்வுரிமையிலோ அக்கறை காட்டாத சட்டவிரோத மணல் அகழ்வாளர்கள் தொடர்ந்தும் மணல் அகழ்வில் ஈடுபடுகின்றனர். தடுக்கும் மக்களை எச்சரித்தும், அடித்து- உதைத்தும் இந்தக் கொள்ளை நீடிக்கிறது.
மக்களின் போருக்கு ஓய்வில்லை. மணல் அகழ்வுக்கு எதிரான முணுமுணுப்புக்களும் இன்னும் அடங்கவில்லை.
இதே நிலைதான் பூநகரி மணல் மேடுகளுக்கும். 2010 ஆம் ஆண்டிலிருந்து மணல் வேட்டை நடக்கிறது. இப்படியாக வடக்கு நிலத்தின் ஒரு அம்சமான மணல் விரைவாகவே கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
ஜெரா
போராட்டம் தொடரும்:-