வடமாகாணத்தில் 1 சதவீத தேர்தல் முறைப்பாடுகள் பதிவு -கபே
கபே அமைப்பின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஊடக அமர்வு ஒன்று இன்று யாழ். வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த அமர்வில் கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் மனாஸ் மக்கீன் கலந்து கொண்டு வாக்களாளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று அவர்களது வாக்குகளை பிரயோகிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் அவர் தனது கருத்துக்களை முன்வைத்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
குறிப்பாக கபே தேர்தல் கண்காணிப்புக்கு இதுவரை மொத்தமாக 1358 முறைப்பாடுகள் தேர்தல் முறைப்பாடுகளாக பதிவாகியிருக்கின்றன.கிடைக்கப் பெற்றிருக்கும் முறைப்பாடுகளில் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறல் என்பதில் 1201 முறைப்பாடுகளும், தேர்தல் வன்செயல் என்ற கட்டத்தில் 157 முறைப்பாடுகளும் பதிவாகியிருக்கின்றன.
பதிவாகியுள்ள முறைப்பாடுகளை பகுப்பாய்வின் மூலம் பார்க்கின்ற சந்தர்ப்பத்தில் அரச சொத்து துஸ்பிரயோகம்,அரச ஊழியர் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தப்படுதல்,அதே போன்ற அரச ஊழியர்களின் இடமாற்றம் தொடர்பில் 438 முறைப்பாடுகளும் சட்டவிரோத தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் தொடர்பில் 763 முறைப்பாடுகளும், கட்டிடங்கள்,தேர்தல் கட்சிக் காரியாலயங்களை சேதப்படுத்தல் தொடர்பில் 50 முறைப்பாடுகளும், தாக்குதல் மற்றும்அச்சுறுத்தல் தொடர்பில் 157 முறைப்பாடுகளும் தேசிய மட்டத்தில் பெறப்பட்ட முறைப்பாடுகள் ஆகும்.
இந்த தேசிய மட்டத்தில் பெறப்பட்ட முறைப்பாடுகளை வடமாகாணத்துடன் ஒப்பிடுகையில்,யாழ்.மாவட்டத்தில் 8 முறைப்பாடுகளும்,வன்னி மாவட்டத்தில் 13 முறைப்பாடுகளும்,இதுவரை பதிவாகியிருக்கின்றன.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விகிதாசார அடிப்படையில் பார்க்கும் பொழுது குறிப்hக 1சதவீத முறைப்பாடு தான் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வடமாகாணத்தில் பதிவாகியுள்ளது.
உண்மையில் ஜனாதிபதித் தேர்தல் ஆரம்பிக்கப்பட்டு ஜனாதிபதித் தேர்தலலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க,ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நாடளாவிய ரீதியில் குறிப்பாக தென்பகுதியில் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் தான் வன்முறைகள் அதிகரிக்கப்பட்டது.
வடமாகாணத்தைப் பொறுத்த வரையில் சட்டவிரோத தேர்தல் பரப்புரைகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றாலும் நேற்று வரையில் வன்முறைகள் எதுவும் இடம்பெறவில்லை.
ஆனால் இன்று அதிகாலை 4 மணியளவில் தொலைபேசி மூலம் 2 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றது. வடமாகாண சபை உறுப்பினர் வீட்டின் மீது கல்வீச்சுத் தாக்குதல்,கோப்பாய் பிரதேசத்தில் கட்சி ஆதரவாளர் தாக்கப்பட்டதாக இந்த இரண்டு முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
இதேவேளை அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு சமுர்த்தி பயனாளிகளை கட்டாயத்தின் பேரில் அழைத்திருப்பது தொடர்பில் யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி ,முல்லைத்தீவு ஆகிய இடங்களில் முறைப்பாடுகள்; பதிவாகியிருக்கின்றது.கூட்டங்;களுக்கு வராவிட்டால் எதிர்காலத்தில் சமுர்த்திக் கொடுப்பனவு வழங்கப்படாது என்ற பேரில் சமுர்த்திப் பயனாளிகளை அச்சுறுத்தி அவர்கள் கூட்டங்களுக்கு பலவந்தமாக அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலும் தேர்தல் தினத்தில் அதிகாலையிலே வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அடையாளஅட்டையையும் எடுத்துச் சென்று வாக்களிக்கலாம்.அதாவது அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டை என்ற சந்தர்ப்பத்தில் தேசிய அடையாள அட்டை,கடவுச்சீட்டு,சாரதி அனுமதிப் பத்திரம்,அரச சேவையாளரின் ஓய்வூதிய அடையாள அட்டை,மதகுரு அடையாள அட்டை,முதியோர் அடையாள அட்டை போன்ற 6 அடையாள அட்டை எடுத்துச் சென்று வாக்களிக்கலாம்.
அவ்வாறு ஒன்றும் இல்லாதவர்களுக்கு இம்முறை தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய தேர்தல் திணைக்களத்தினால்; தற்காலிக அடையாள அட்டை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
எனவே வாக்காளர்கள் ஏழுவிதமானஅடையாள அட்டைகளில் ஏதாவது அடையாள அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டு சென்று எந்தவித அச்சமுமின்றி அதிகாலையிலேயே வாக்குகளை பிரயோகிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.