Breaking News

தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான யோசனை என்ன?-சுரேஸ்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரதானமான பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கப் போகிறார்கள் என்பது பற்றிய யோசனைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைகளுக்கோ, சமஸ்டி முறையிலான தீர்வுக்கோ ஆதரவளிக்கப் போவதில்லை என்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, தெரிவித்துள்ளது குறித்து, வவுனியாவில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள சுரேஸ் பிறேமச்சந்திரன்

“தமிழர்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கப்போகிறார்கள் என்ற வேட்பாளர்களின் யோசனைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காத்திருக்கிறது.அவை வெளியான பின்னரே யாரை ஆதரிப்பது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானிக்கும்.

ஊழல் இருக்கிறது என்று எமக்குத் தெரியும், குடும்ப ஆட்சி நிலவுகிறது என்பதும் தெரியும். இவை அகற்றப்பட வேண்டும் என்பதையும் நாம் அறிவோம்.ஆனால் தமிழர்கள், வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.வடக்கிலுள்ள மக்களின் பிரதானமான பிரச்சினை, போர் முடிந்த பின்னரும், அங்குள்ள பொதுமக்களில் ஒரு பகுதியினரால் சொந்த நிலங்களுக்குச் செல்ல முடியவில்லை.அவர்களின் நிலங்களை சிறிலங்கா படையினர் தொடர்ந்து அபகரித்து வருகின்றனர்.

போர் முடிந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் நாம் சிறப்பான பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறோம்.மைத்திரிபால சிறிசேனவோ அல்லது போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களோ, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கப் போகிறார்கள் என்று அறிந்து கொள்ள கூட்டமைப்பு விரும்புகிறது.

இதற்கான பதிலை நாம் வேட்பாளர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.அவ்வாறு பதிலளித்தால் அவர்களுடன் பேசுவோம்.இறுதி முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள எல்லாக் கட்சிகளும் இணைந்தே மேற்கொள்ளும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.