வடமாகாண சபையில் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
வடக்கு மாகாண சபையின் 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்ப்புகளின்றி, எதிர்க்கட்சியினரின் பூரண ஆதரவுடன் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 17 ஆம் திகதியிலிருந்து ஐந்து அமைசச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பாக வாதிப்பிரதிவாதங்களை அடுத்து இன்று மாலை 6 மணியளவில் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை ஆளுநர் செயலகத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற வடக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் குறித்த செயலகத்திற்கு நிதி ஒதுக்கிடுவது தொடர்பில் வாக்கெடுப்பினை நடாத்துமாறு சிவாஜிலிங்கம் அவைத்தலைவரிடம் கோரிய போது அனந்தி அதனை வழிமொழிந்தார்.
இந்த நிலையில் கோரிக்கையினை ஏற்றுக் கொள்வதாகவும் ஆனால் வாக்கெடுப்பு நடாத்த முடியாது எனவும் அவைத்தலைவர் தெரிவித்தமையால் அவர்கள் இருவரும் 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் நடுநிலைமை வகிப்பதாக தெரிவித்தனர்.
மேலும் 2015 ஆம் ஆண்டுக்கான முதல் அமர்வு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.