இராணுவ உயரதிகாரியை கைது செய்யுமாறு கோரிக்கை
தென்னாபிரிக்கா சென்றுள்ள இலங்கையின் முன்னாள் இராஜதந்திரி, இராணுவ உயரதிகாரி ஜெனரல் ஸ்ரீலால் வீரசூரியவை போர்க் குற்றத்துக்காக கைது செய்யும்படி, அந்த நாட்டில் வாழும் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்னாபிரிக்காவில் நடைபெறும் கிறிஸ்துவ இராணுவத்தினருக்கான மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.இந்நிலையில், 1990-களில் இலங்கை இராணுவ படைப்பிரிவு தளபதியாக இருந்தபோது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக அவர் மீது தென்னாபிரிக்க வாழ் தமிழர்கள் கூட்டமைப்பு (எஸ்.ஏ.டி.எஃப்.) குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.
இதுகுறித்துஅந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
வெளிநாட்டுக் குற்றங்களுக்கான தென்னாபிரிக்க சிறப்புப் பிரிவிடம் ஜெனரல் ஸ்ரீலால் வீரசூரியவுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளோம்.இலங்கையில் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ள தமிழர்களுக்கு எப்போதும் ஆதரவு அளித்து வரும் தென்னாபிரிக்க அரசு, சர்வதேச சட்டப்படி அவரை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று எஸ்.ஏ.டி.எஃப். அமைப்பு கூறியுள்ளது.