மகிந்தவிற்கு ஓய்வு வழங்க வேண்டும்-ரணில்
ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஓய்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எனது நல்ல நண்பர், கடந்த எட்டு ஆண்டுகளாக அவர் கடமையாற்றியுள்ளார். அவரை ஓய்வூறுத்தி அதிக வேலைப்பளுவிலிருந்து விடுவிக்க வேண்டிய பொறுப்பு என்னைச்சாரும்.
அமைச்சரவையில் 70 பேர் அங்கம் வகிக்கின்றனர். நாடாளுமன்ற அதிகாரங்களும் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளது.எல்லா இடங்களிலும் ராஜபக்ச அதிகாரம் பரவியுள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் பொதுச் செயலாளரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.ஒருவர் ராஜபக்ச அரசாங்கத்தையும் மற்றுமொருவர் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்து போட்டியிடுகின்றனர்.
ராஜபக்ச அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பத்து பக்கங்கள் செய்தவை பற்றியும், 100 பக்கங்களில் செய்யப் போவது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.ராஜபக்ச அரசாங்கம் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிடாது, சுய விமர்சனம் ஒன்றையே செய்துள்ளது.நாட்டில் தொழில் வாய்ப்பு இல்லையாம், போதைப் பொருள் பயன்பாடு தலைவிரித்தாடுகின்றதாம்.
அதுசரி இந்த நாட்டை கடந்த எட்டு ஆண்டுகள் யார் ஆட்சி செய்தார்கள்? நாமா அல்லது ராஜபக்ஸ குடும்பத்தினரா?இளைஞர் யுவதிகள் ரிலோட் ஒன்றை போடக் கூட பணம் இல்லாமல் இருக்கின்றார்கள்.உடுப்பு வாங்கவோ அல்லது காலணிகளை வாங்கவோ பணம் இல்லை.
நாம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டால் பத்து லட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்போம்.ராஜபக்ச ஆட்சியாளர்களை விரட்டியடிக்கவும், நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தவும் மக்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களிக்க வேண்டுமென ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.