இரகசிய முறையில் வடக்கில் சிங்கள குடியேற்றம்
வடக்கில் இரகசியமான முறையில் சிங்கள குடியேற்றங்கள் நிறுவப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.
"நான் அதிகமாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பணியாற்றியுள்ளேன். வவுனியா தெற்கு பிரதேச சபைப் பகுதிக்குச் சென்றபோது, அங்குள்ள மிகவும் நல்ல இளைஞர் ஒருவர், "ஏன் வெளியிலிருந்து கொண்டுவந்து இங்கு குடியேற்றுகின்றீர்கள்'' என்று கேட்டார். இது குறித்து மீள்குடியேற்ற அமைச்சிடம் நான் விசாரித்தபோது, "இது எமது அமைச்சால் இடம்பெறும் செயல் அல்ல. வேறு நபர்கள்தான் இதைச் செய்கின்றனர்'' என அமைச்சிலிருந்து தகவல் கிடைத்தது.
'நாமல் கம' என வடக்கில் ஒரு கிராமத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. எதற்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது? அது தவறு. நாமலுக்கு என்ன நடந்தது? வடக்கிலுள்ள அனைவரும் இது தவறு எனக் கூறுகின்றனர். அங்குள்ள சிங்கள மக்களும் இதைத்தான் கூறுகின்றனர்.
மேலதிக இடங்களை எமது பிள்ளைகளுக்குக் கொடுங்கள். அல்லது தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வழங்குங்கள். ஏன் வெளியிலிருந்து மக்களைக் கொண்டுவந்து குடியமர்த்துகின்றீர்கள் என்று கேட்கின்றனர். மக்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் அறிவிக்காமல் மிகவும் இரகசியமான முறையில் இது செய்யப்படுகின்றது'' என அவர் குறிப்பிட்டுள்ளார்.