நுணலும் தன் வாயால் கெடும்! கூட்டமைப்பின் வாயால் யார் கெடுவார்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தே ஆகுவது என்று விடாப்பிடியாக நிற்கிறது.
நாங்களும் இவ்விடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வேண்டாம்... வேண்டாம்... என்று எழுதி விட்டோம்.
கெடுகுடி சொற்கேளாது என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதித்தேர்தலில் யாரை ஆதரிப்பதென்று வெளிப்படுத்தப் போவதாக கூட்டமைப்பு கச்சை கட்டி நிற்கிறது.
ஐயா! எங்களுக்கென்ன? யார் வென்றாலும் ஒன்று தான். எனினும் யார் வென்றால் நல்லது என்று தமிழ் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தால் மட்டுமே தமிழ் மக்கள் அதன்படி நடப்பார்கள் என்று எதுவும் கிடையாது.
அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிப்பதென்று வெளிப்படுத்தப் போகும் அறிவிப்பை தமிழ் மக்கள் எதிர்பார்க்கவும் இல்லை.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களின் நிலைப்பாடு கூட்டமைப்பு வாய் திறக்காமல் இருக்க வேண்டுமென்பதாகும்.
நிலைமை இதுவாகவிருக்க, ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பதென்ற முடிவை வெளியிடப் போவதாகக் கூட்டமைப்பு கூறுவதற்குள் ஏதோ ஒரு தந்திரம் இருப்பதாகத் தெரிகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாகக் கூட்டமைப்பு விடுத்த அறிவிப்பு தென் பகுதியில் எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டதென்பது தெரிந்த விடயம்.
சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாகக் கூட்டமைப்புக் கூறியதை மாற்றியமைத்து பிரசாரம் செய்யப்படும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை என்று கூறினால் ஏற்புடையது.
ஆனால் எதிர்வரும் 8-ந் திகதி நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் அதே பிழையை விடுவதென்றால் அதனைப் பிழையன்று எப்படிக் கூறமுடியும்?
மாறாக ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு உள் நோக்கத்துடன் செயற்படுகிறது என்றே கூறவேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்வை ஆதரிப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை விட்டால் இதற்கு மைத்திரிபால சிறிசேன தரப்பு வேறு ஒரு வடிவம் கொடுக்கும்.
அதேநேரம் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுக்கான சாத்தியப்பாடுகள் சங்கடப்படும்.
தவிர, மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தால் அந்தோ கதிதான்.
முஸ்லிம்களும் மைத்திரி பக்கம்; தமிழர்களும் மைத்திரி பக்கம் என்னருமை சிங்கள மக்களே! வீரத் தலைவன் துட்டகைமுனுவின் பரம்பரையில் வந்த சிங்களப் பெருங்குடிகளே! தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்தால் நாளை உங்கள் கதி என்ன? என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக் கேட்பார்.
அந்தக் கேள்விக்கு சிங்கள மக்கள் பதில் அளிக்க ஒரு இரவுப்பெழுது போதும். மறுநாள் 8-ந் திகதி தமிழர்களும் முஸ்லிம்களும் ஆதரித்தவர் படுதோல்வி என்பதாக தேர்தல் முடிவு அமையும்.
அதேநேரம் மகிந்த ராஜபக் மீண்டும் ஜனாதிபதியானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் கூடியிருந்து தேநீர் அருந்தவும் முடியாமல் போகும்.
ஆகையால், தமிழ் மக்கள் தீர்மானிப்பார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சொல்லிவிட்டு மெளனமாக இருக்க வேண்டும்.
இல்லை முஸ்லிம் கட்சிகள் போல நாங்களும் ஆதரவை அறிவிப்போம் என்றால், நுணல் (தவளை) தன்வாயால் கெடும் என்பது போல; கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவோர் கூட்டமைப்பின் வாயால் கெடுவர் என்றாகி விடும்.
-வலம்புரி-