கூட்டமைப்பு இன்னும் முடிவெடுக்கவில்லை
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்று நேற்றைய கூட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் முடிவை அறிவிப்பதென்று இன்று தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று மாலை கொழும்பு மாதிவெலயில் நடைபெற்றது.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நீண்டநேரமாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது இரு வேட்பாளர்களிடமிருந்தும் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய பாதகமான விடயங்கள் தொடர்பாக கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகளால் எடுத்துக் கூறப்பட்டது.
அத்துடன் ஆட்சி மாற்றத்தின் அவசியம் குறித்தும், எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் சம்பந்தமாக எதுவுமே குறிப்பிடப்படாத விடயம் பற்றியும், தமிழ் மக்களது பிரச்சினைகள் சம்பந்தமாகவும் நீண்டநேரமாக கலந்துரையாடப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை அதன் தலைவர் இரா.சம்பந்தன் ஓரிரு தினங்களுக்குள் பத்திரிகை மாநாடு ஊடாக அறிவிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ராகவன், கருணாகரம், இரா.துரைரெட்ணம், ஹென்றி மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.