தமிழீழக் கோரிக்கை மீண்டும் புதிய வடிவில்-.திஸநாயக்க
தமிழீழக் கோரிக்கை மீண்டும் புதிய வடிவில் தோற்றம் பெற்றுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழீழப் போராட்டத்தை தடுத்து நிறுத்தவே அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. "ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் எமது அரசின் மூன்றாவது செயற்றிட்டமாகும்.
மகிந்த சிந்தனையில் 'உலகத்தை வெல்லும் வழி' என்ற தொனிப்பொருளில் இது அமைந்துள்ளது. உலகின் மிகவும் பயங்கர அமைப்பாக இனங்காணப்பட்ட விடுதலைப் புலிகளின் தமிழீழக் கோரிக்கை மீண்டும் புதிய வடிவங்களில் உருவெடுத்துள்ளன. இவற்றை முறியடிப்பதற்காகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், மைத்திரிபாலவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய பாதுகாப்பு குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இதன்மூலம் பொது எதிரணியின் நோக்கம் எமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. மேற்கத்தேய நாடுகளினதும், புலம்பெயர் தமிழர் அமைப்புகளினதும் அனுசரணையில் செயற்படும் பொது எதிரணியினர் அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றுகின்றனர் என வாக்குறுதி வழங்கியே செயற்படுகின்றனர்.
அது மாத்திரமல்லாது அவர்கள் வெற்றிபெறுவார்களாயின் மீண்டும் விடுதலைப் புலிகள் தோன்றக்கூடிய பயங்கரநிலை உருவாகும். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.