Breaking News

மனித உரிமை ஆணைக்குழு யாழ்.ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு

யாழ்.உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்க வருமாறு, மனிதவுரிமைகள் ஆணைக்குழு தலைமையகம் யாழ்.ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த வருடம் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் பொதுமக்களின் பெறுமதியான வீடுகள் உடைத்து அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குடாநாட்டு ஊடகவியலாளர்கள் 5 பேர் அங்கு சென்று செய்தி சேகரித்துக் கொண்டிருந்தனர்.
இதன்போது ஊடகவியலாளர்களை சுற்றி வளைத்த படையினர் அவர்களுடைய புகைப்படக் கருவிகளில் இருந்த புகைப்படங்களை அழித்ததுடன், அந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானால் கொலை செய்யப்படுவீர்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுக்கு முன்னிலையில் அச்சுறுத்தல் விடுத்தனர்.
எனினும் குறித்த செய்தி மறுநாள் பத்திரிகைகளில் வெளியானதுடன், அச்சுறுத்தப்பட்ட விடயமும் வெளியாகியிருந்தது.
இதனையடுத்து ஊடகவியலாளர்கள் சார்பில் யாழ் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனடிப்படையில் மேற்படி சம்பவம் தொடர்பில் தமக்கு விளக்கமளிக்குமாறு மனிதவுரிமைகள் ஆணைக் குழுவின் கொழும்பு தலமையகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 9ம் திகதி தம்மை நேரில் சந்திக்குமாறும் தெரிவித்துள்ளது.