Breaking News

யாழில் காணாமல் போன லொறியின் பின்னணியில் அதிர்ச்சித் தகவல்

யாழ்ப்பாணம்- திருநெல்வேலி பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்காக உணவுப் பொருட்களை கொண்டுவந்த லொறி காணாமல் போன சம்பவம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பொலிஸார் குறித்த லொறியில் உணவு பொருட்களுக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்ட தமிழ் இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம்- திருநெல்வேலி பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்காக 45 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை சிங்கள உரிமையாளர்களின் லொறி ஒன்றில் யாழ்ப்பாணம் அனுப்பியுள்ளனர். மேலும் அவற்றுக்கு பாதுகாப்பாக சாரதி மற்றும் நடத்துனருடன் மல்லாவி- வவுனிக்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் அனுப்பப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 30ம் திகதி யாழ்.நோக்கி வந்த லொறி புத்தளம் பகுதிக்கு பின்னர் தொடர்புகளை துண்டித்ததுடன், காணாமல் போனது. பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு பொலிஸார் மற்றும் யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைப்பாடு பதியப்பட்டது.

இதனையடுத்து தேடுதல் நடவடிக்கை நடத்திய பொலிஸார், லொறியின் நடத்துனரை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின்படி லொறியில் கொண்டு வரப்பட்ட பொருட்களை தானும் சாரதியும் பகிர்ந்து விற்றதாகவும், அதற்குப் பொறுப்பாக அனுப்பப்பட்ட தமிழ் இளைஞரை கொலை செய்து அனுராதபுரம்- புத்தளம் பகுதிகளுக்கிடையில் உள்ள காட்டில் புதைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

அதன்படி குறித்த காட்டுப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் உயிரிழந்த தமிழ் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்த இளைஞர் மல்லாவி- வவுனிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆ.உஸாந்த வயது 20 என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்படவில்லை என்பதுடன், அவர் முன்னாள் படைச்சிப்பாய் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.