கூட்டமைப்பின் பகிரங்க ஆதரவு வேண்டாம்- சந்திரிக்கா
பொது வேட்பாளருக்கான ஆதரவினை பகிரங்கமாக வழங்க வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
சந்திரிக்காவின் இந்தக் கோரிக்கையினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.
இரகசியமான முறையில் ஆதரவளிக்குமாறு பொது வேட்பாளர் தரப்பில் கோரப்பட்டதாகவும் அதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆதரவு வழங்குவது பகிரங்கமாக ஆதரவளிக்க வேண்டும் என ஒரு தரப்பினரும், இரகசியமாக ஆதரவளிக்க வேண்டுமென மற்றுமொரு தரப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கோரி வருகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக பொது வேட்பாளருக்கு ஆதரவளித்தால் அது தெற்கு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதில் சிக்கலை ஏற்படுத்தக் கூடும்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஜாதிக ஹெல உறுமயவுடன் தனியான உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டார்.
அதே போன்றதொரு உடன்படிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் கைச்சாத்திட உள்ளார் என சிங்களப் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், எதிர்வரும் 8ம் திகதியின் பின்னரே யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.