வன்னியில் இராணுவத்தினர் தேர்தல் பிரச்சாரம்
வன்னிப் பகுதியில் இராணுவத்தினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
பிரதான வீதிகள், நகரங்களில் ஜனாதிபதி மகிந்தவின் தேர்தல் பிரசார பதாகைகளை பொருத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். ஏ-9 வீதியின் அருகில் உள்ள மரங்களில் மகிந்தவுக்கு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதியின் பல இடங்களில் மகிந்தவின் பாரிய பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு திறப்பு விழாக்களின்போதும் நிரந்தர பதாகைகளாக அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையாளரின் உத்திரவிற்கிணங்க இவற்றை அகற்ற வேண்டியபோதிலும் அவை அகற்றப்படாமல் தொடர்ந்தும் காணப்படுகின்றது. அவற்றில் ஜனாதிபதி மகிந்த உள்ளிட்ட அரச தரப்பினரின் புகைப்படங்கள் இணைக்கபட்டுள்ளன.
இந்நிலையில் வன்னியில் உள்ள சில கிராமங்களுக்குச் செல்லும் இராணுவத்தினர் ஜனாதிபதி மகிந்தவுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்குத் தெரிவிக்கின்றனர். இந்த பிரசாரப் பணியை கடந்த சில நாட்களாக இராணுவத்தினர் தொடர்கின்றனர். ஜனாதிபதி மகிந்தவே மீண்டும் ஜனாதிபதியாக வருவார் என்றும் அவர் வந்தால்தான் உங்களுக்கு பாதுகாப்பு என்றும் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.