சுன்னாகம் எண்ணெய் கசிவு விரைவாக பரவுகின்றது
சுன்னாகம் மின்சார சபையின் எண்ணெய் கசிவுகள் தற்போது மல்லாகம் காட்டுத்தரை கிராமத்திலுள்ள கிணறுகள் வரை பரவி வருவதாக பிரதேச மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இது பற்றி பாதிக்கப்பட்ட மக்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருடன் சென்று 15 கிணறுகளின் நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அந்த பரிசோதனை முடிவில் குறித்த பகுதிகளிலுள்ள கிணறுகளிலும் எண்ணெய் கசிவுகள் பரவ ஆரம்பித்துள்ளதாக தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.நந்தகுமார் தெரிவித்தார்.
சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு எண்ணெய் வெறுமனே நிலத்தில் கசிய விடப்பட்டமையால் சுற்றாடலிலுள்ள கிணறுகளில் எண்ணெய் படலம் தென்பட்டது. அருகிலிருந்து கிணறுகளுக்கு ஏற்பட்ட எண்ணெய் கசிவுகள் தற்போது, மின் பிறப்பாக்கி அமைந்துள்ள வளாகத்தை சூழவுள்ள 5 கிலோமீற்றர் தூரத்துக்கு பரவி வருகிறது.
அதன்படி மல்லாகம், ஏழாலை, கட்டுவன் ஆகிய பகுதிகளுக்கும் படிப்படியாக பரவியுள்ளது. இது தொடர்பில் தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி உட்பட பாதிக்கப்பட்ட 11 பேரும் தனித்தனியான வழக்குகளை நொர்தேன் பவர் நிறுவனம், மற்றும் உத்துரு ஜனனி திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளனர்.
அது தொடர்பான வழக்கும் நடைபெற்று வருகின்றது. இந்த விடயம் தொடர்பாக பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கையில், தற்போது மல்லாகம் காட்டுத்தரை பகுதியிலுள்ள கிணறுகளிலும் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதால் அதனை அண்மித்த பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர். மழை பெய்து வருவதால் எண்ணெய்க் கசிவுகள் இலகுவாக பரவி வருகின்றது. இது தொடர் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் எதிர்காலத்தில் சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.
குறித்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க யாரும் முன்வரவில்லை. தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். மின்சார சபையிலிருந்து வெளிவரும் அதிக ஒலியால் அயலிலுள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாக பிரதேச மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.