மைத்திரிபால நாட்டின் அரசியலை சீர்குலைக்க முயற்சி– திஸ்ஸ
ஐக்கிய தேசியக் கட்சி உரிய இலக்குகளை நோக்கி செல்லாமையே கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்யக் காரணமென பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கின்றார்.
பத்தரமுல்லையில் இன்று பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், திஸ்ஸ அத்தநாயக்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென தாம் கோரிக்கை விடுத்திருந்ததாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடா விட்டால், கட்சியின் பிரதித் தலைவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென யோசனை முன்வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தமது கோரிக்கைகளை செவிமடுக்காது, மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டமை ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான ஆதரவாளர்களை வெகுவாக பாதிக்கும் என திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு ஆதரவளிக்கும் பல்வேறு தரப்பினருடன், தனித் தனியான உடன்படிக்கைகளை செய்துகொண்டு, மைத்திரிபால சிறிசேன நாட்டின் அரசியல் ஸ்திரதன்மையை சீர்குலைக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட தீர்மானித்ததாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.