முக்கியமானதாக அமையப் போகும் தமிழர் தரப்பின் முடிவுகள்
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பே, முக்கிய வேட்பாளர்களின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் ஆரம்பித்துவிட்டன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக அரியணை ஏறுவதற்கு எடுத்துள்ள முயற்சியை முறியடிக்க வேண்டும் என்பதற்காகவே எதிரணியின் சார்பிலான பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராகக் களத்தில் இறக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். எதேச்சதிகாரப் போக்கிற்கு வழி வகுத்துள்ள ஜனாதிபதி ஆட்சி முறைமைக்கு 100 நாட்களுக்குள் முடிவு கட்ட வேண்டும் என்பது பொது எதிரணியின் தேர்தல் திடசங்கற்பமாக உள்ளது, அரச தலைவரும், அரசிலிருந்து அதிரடியாக எதிரணியின் பொது வேட்பாளர் நிலைக்குத் தாவியுள்ள பொது வேட்பாளரும் மோதிக்கொள்கின்ற வித்தியாசமான ஒரு தேர்தல் களமாக இந்த ஜனாதிபதி தேர்தல் போட்டி அமைந்திருக்கின்றது.
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராகவும், அரச கூட்டணியின் தலைமைக் கட்சியாகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமாக இருந்த மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டவரும், யுத்தத்தை வெற்றிகொண்ட தலைவருமாகிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை எதிர்த்து போட்டியிட துணிந்து முன்வந்துள்ளார். இதனால் இந்தத் தேர்தல் கடும் போட்டி மிக்கதாகக் கருதப்படுகின்றது.
அத்துடன், என்ன நடக்கப் போகின்றது என்று பலரையும் ஆவல் கொள்ளச் செய்திருக்கின்றது. இந்தத் தேர்தல் போட்டியில் அரச தரப்பினருடன் யார் தொடர்ந்து இருக்கப் போகின்றார்கள், யார் யாரெல்லாம் எதிரணிக்குத் தாவப் போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியிருக்கின்றது. அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவியில் இருந்தவர்களே பதவிகளை உதறித்தள்ளிவிட்டு, எதிரணியில் இணைந்து கொண்ட சம்பவம் நாட்டின் அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது.
அமைச்சராகப் பதவி வகித்திருந்த மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராகப் எதிரணியினரால் பிரகடனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அரசாங்கத்திற்குள் பெரும் அதிருப்தியடைந்திருக்கின்றார்கள் என தெரிவிக்கப்படுவதுடன் மேலும் பலர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி பொது எதிரணியில் இணைந்து கொள்வார்கள் என்ற பரபரப்பான ஒரு சூழலும் காணப்பட்டிருந்தது.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பை எதிர்நோக்கி, இறுதிக்கட்ட விவாத நிலையில் இருந்தபோதே, அரசாங்கத்தில் உடைவு ஏற்பட்டிருந்தது. இந்த உடைவு மேலும் பெரிதாகி, ஆட்சியே கவிழ்ந்துவிடுமோ என்று பலரும் அச்சம் கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருந்தது.
ஆயினும் வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. அரசாங்கமும் தப்பிப் பிழைத்தது. இருந்தபோதிலும், அரசாங்கத்திற்குள்ளேயே அதிருப்தியுடன் இருக்கின்ற பலர் எந்த நேரத்திலும் எதிரணிக்குத் தாவலாம் என்ற பொதுவான எதிர்பார்ப்பு பரவலாகக் காணப்படுகின்றது. இத்தகைய பின்னணியில்தான், அரசுக்கு ஆதரவாகச் செயற்பட்டிருந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும், எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டுள்ளதாக வர்ணிக்கப்படுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் என்ன செய்யப் போகின்றன, எந்த அணியுடன் கூட்டுச் சேரப் போகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்கப் போகின்றது என்பது முக்கிய கேள்வியாக இருக்கின்றது. அரசாங்கத்தில் பிளவை ஏற்படுத்தி. முக்கிய அமைச்சராக இருந்த ஒருவரையே பொது வேட்பாளராகக் களமிறக்கிய சூத்திரதாரியாகிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டிருக்கின்றது என்று அரசாங்கம் கூறுகின்றது.
கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்வதென்பது, நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்கும் நடவடிக்கையாகவே அமையும் என்றும் அரசாங்கத்தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. கூட்டமைப்புக்கும் பொது எதிரணியினருக்கும் இடையிலான இரகசிய ஒப்பந்தம் என்பது, சிங்கள மக்களை ஏமாற்றுவதற்காகச் செய்யப்பட்ட ஒப்பந்தமாகும் என்று அமைச்சர் ஜோன் செனவிரத்ன செய்தியாளர்கள் மத்தியில் கூறியிருக்கின்றார்.
இந்த ஒப்பந்தத்தை இரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டரநாயக்கா கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் கூறியிருப்பதாகவும், அதன்படி இந்த ஒப்பந்தம் இரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
தேர்தலில் தமிழ்த் தரப்பினர் வெறும் பகடைக் காயா……? மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக நிறுத்தியுள்ள சந்திரிகா பண்டாரநாயக்கா, கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்திருக்கின்றார் என்பதை சிங்கள மக்கள் அறிந்தால் மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற காரணத்திற்காகவே இந்த ஒப்பந்தம் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றது என்றும் அமைச்சர் ஜோன் செனவிரத்ன சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அமைச்சர் ஜோன் செனவிரத்ன இந்தக் கருத்தை வெளியிடுவதற்கு முன்னதாக, அண்மையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
அதற்குப் பதிலளித்திருந்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், அரசாங்கத்தின் அழைப்பை தாங்கள் நிராகரிக்கவில்லை. அது குறித்து நிதானமாகப் பரிசீலிக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், எதிரணியின் முக்கியஸ்தராகிய சந்திரிகா பண்டாரநாயக்கா கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருக்கின்றார் என்று அரசாங்கத்தின் மற்றுமொரு அமைச்சராகிய ஜோன் செனவிரத்ன இப்போது தெரிவித்திருக்கின்றார்.
அரசாங்கத் தரப்பினர் உண்மையாகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பை, இந்தத் தேர்தலில் கௌரவத்துக்குரியதொரு முக்கிய அம்சமாகக் கருதுகின்றார்களா என்பது சந்தேகத்திற்குரியதாகியிருக்கின்றது. அரசாங்கத்தரப்பினர் வெளிப்படுத்தி வருகின்ற கருத்துக்களை நோக்கும்போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும், தமிழ் மக்களையும் தேர்தல் பிரசாரத்திற்குரிய பகடைக்காயாகப் பயன்படுத்தத்தான் முயற்சிக்கின்றார்களோ என்று சிந்திக்கத் தூண்டியிருக்கின்றது.
அதேநேரம் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், எதிரணியினருடன் முக்கிய பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ள போதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு எதிரணியினர் தயாராக உள்ளனரா என்ற கேள்வியும் எழுகின்றது. நாட்டில் ஓர் ஆட்சிமாற்றத்தை வலியுறுத்தி ஜனாதிபதி தேர்தலில் குதித்துள்ள பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, தமிழர் பிரச்சினைக்கு என்ன தீர்வு காணப்படும் என்பது குறித்து எந்தவிதமான சைகைகளையும் காட்டவில்லை.
இந்த நிலைமையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ன செய்யப் போகின்றது, எத்தகைய நிலைப்பாட்டை இந்த ஜனாதிபதி தேர்தலில் அது எடுக்கப் போகின்றது என்ற கேள்வி விஸ்வரூபமெடுத்திருக்கின்றது.
அரசுக்கா, எதிரணிக்கா -கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு?
இந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கடும் போட்டி ஏற்பட்டிருக்கின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் நிலவிய போட்டியிலும் பார்க்க இது முற்றிலும் வித்தியாசமானது,கடுமையானது.
கடந்த தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும், முன்னாள் இராணுவ தளபதியாக இருந்து அரசியலில் பிரவேசித்திருந்த சரத் பொன்சேகாவுக்கும் இடையில் போட்டி நிலவியது. ஆயினும், அந்தப் போட்டியானது, இப்போதைய போட்டியைப் போன்று கடுமையானதாக இருக்கவில்லை.
இம்முறை நாட்டில் உள்ள பல எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிராக அணி சேர்ந்திருக்கின்றன. பதவியில் இருக்கின்ற அதிகார பலமுள்ள ஒருவருக்கும், அதே கட்சியில் அவருடன் செயற்பட்டிருந்த பின்னர் பிரிந்து வந்து எதிரணியில் சேர்ந்துள்ள ஒருவருக்கும் இடையில் இம்முறை போட்டி நிலவுகின்றது.
கடந்த முறை புதிதாகத் தோற்றம் பெற்றிருந்த ஓர் அரசியல் கட்சியின் தலைவராகிய முன்னாள் இராணுவ அதிகாரியும். அரசியலுக்குப் புதியவருமாகிய சரத் பொன்சேகாவே ஜனாதிபதிக்கு எதிராகத் தேர்தல் களத்தில் குதித்திருந்தார். ஆனால் இம்முறை பலமுள்ள ஒருவர், பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த பலமான எதிரணியின் பின்னணி பலத்தைக் கொண்டு தேர்தல் களத்தில் மோதுவதற்கு முற்பட்டிருக்கின்றார்.
எனவே, இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது. இந்தத் தேர்தலில் தமிழர் தரப்பினர் எடுக்கப் போகின்ற முடிவும் முக்கியமாகவே அமையப் போகின்றது. ஆனால் அந்த முடிவு என்ன என்பதே இப்போதைய கேள்வியாக இருக்கின்றது. இந்தத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து, கூட்டமைப்பு இன்னும் தீர்மானிக்கவில்லை.
அது குறித்து நிதானமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மக்களின் கருத்தை அறிந்து அதற்கேற்ற வகையிலேயே முடிவு எடுக்கப்படும் என்று கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இப்போதுள்ள நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இவரைத்தான் தேர்தலில் ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானித்து, அதன்படி வாக்களிக்குமாறு தமிழ் மக்களை வெளிப்படையாகக் கூறுமா என்பது சந்தேகமாக இருக்கின்றது. ஏனெனில் தேர்தல் களத்தில் குதித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் சரி, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் சரி தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான தேர்தல் கால வாக்குறுதிகளைக் கூட இன்னும் வெளிப்படுத்தவில்லை.
வேட்பு மனு தாக்கல் செய்ததன் பின்னர் அவர்கள் வெளியிடப் போகின்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அவர்களின் நிலைப்பாடு குறித்து குறிப்பிடுவார்களா என்பதும் சந்தேகமாகவே இருக்கின்றது. ஏனெனில் இரண்டு முக்கிய வேட்பாளர்களினதும் தேர்தல் கால நோக்கங்களுமே, நாட்டின் முக்கிய பிரச்சினையாகிய தேசிய இனப்பிரச்சினை சார்ந்ததாகத் தெரியவில்லை.
அவர்களுடைய தேர்தல் இலக்குகள் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுகின்ற விடயத்துடன் சார்ந்திருப்பதாகவும் கூற முடியாமல் இருக்கின்றது. எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தாத இந்தத் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பதென்பது சிக்கலான ஒரு விடயம் என்பதில் சந்தேகமில்லை.
யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்தரை வருடங்களாகின்றன. இந்தக் காலப்பகுதியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரை எந்தவொரு தேர்தலிலும் தமிழ் மக்கள் பெரிய அளவில் ஆதரித்து வாக்களிக்கவில்லை. கடந்த முறை ஜனாதிபதி தேர்தலிலும் தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு வாக்களிக்கவில்லை.
எல்லா தேர்தல்களிலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக அரச தரப்பினரைப் புறந்தள்ளியே வாக்களித்திருக்கின்றார்கள். அவர்களைத் தோற்கடிக்கும் வகையிலேயே தமிழ் மக்களின் வாக்களிப்பு இடம்பெற்றிருக்கின்றது. (20 ஆம் பக்கம் பார்க்க) ஆயினும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், அரச தரப்பினர் விசேடமாக எதையும் செய்திருப்பதாகவும் கூற முடியாமல் இருக்கின்றது.
தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பல பிரச்சினைகள் இன்னும் பிரச்சினைகளாகவே இருக்கின்றன. அவற்றை பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்தில், நாட்டின் அரசாங்கம் பொறுப்போடு மேற்கொண்டிருக்க வேண்டிய கடமைகளைச் செய்யவில்லை என்றே கூற வேண்டியிருக்கின்றது.
யுத்த மோதல்களில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளை, யுத்தம் முடிவுக்கு வந்ததும், பொது மன்னிப்பு வழங்கப்படும், இராணுவத்தினரிடம் சரணடையுங்கள் என்று அரசாங்கம் கோரியிருந்தது. அரசாங்கத்தின் உத்தரவாதத்தை ஏற்று பலரும் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள். அவ்வாறு சரணடைந்த பெரும் எண்ணிக்கையானவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கின்றது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் அரச படைகளின் பலதரப்பினராலும் தெரிந்தும் தெரியாமலும் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் கொண்டு செல்லப்பட்டவர்கள் பலர் இன்னும் காணாமல் போனவர்களாகவே இருக்கின்றார்கள். இவர்கள் குறித்த சரியான தகவலையோ அல்லது உண்மையான நிலைப்பாட்டையோ அரசாங்கம் இன்னும் வெளிப்படுத்தவில்லை.
காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி வருகின்றதே தவிர, காணமால் போயுள்ள ஒருவரையாவது கண்டுபிடித்துள்ளோம் என்றோ அல்லது அவர்கள் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்றோ இதுவரையிலும் தெரிவிக்கவில்லை.
காணாமல் போனவர்களுக்கு மரண அத்தாட்சிப் பத்திரம் பெற்றுக் கொண்டால் என்ன என்ற வகையிலான ஒரு முடிவை காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் சாட்சியமளித்துள்ளவர்கள் மீது திணிப்பதற்கான முயற்சியையே அந்த ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது. இராணுவத்தினரிடம் சரணடைந்தபின் காணாமல் போயிருக்கின்றார்கள் என்று எண்ணற்றவர்கள் சாட்சியமளித்துள்ள போதிலும் காணாமல் போயிருப்பவர்கள் விடயத்தில் அரச படைகளே பொறுப்பு என்று வெளிப்படையாகச் சுட்டிக்காட்டி, அவர்களை விசாரணைக்கு உள்ளாக்குவதற்கான முயற்சிகளை இந்த ஆணைக்குழு மேற்கொள்ளவே இல்லை.
மாறாக காணாமல் போனோருக்கும் இராணுவத்தினருக்கும் சம்பந்தமே இல்லை என்று வாதாடவும், அதனை உறுதிப்படுத்தவுமே இந்த ஆணைக்குழு முயற்சித்து வருகின்றது என்று பாதிக்கப்பட்டவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள். அதேநேரம் சந்தேகத்தின்பேரில் அவசரகாலச் சட்டம், பயங்கரவாதச் சட்டம் என்பவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு, நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் பலர் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
அவர்கள் குற்றச்சாட்டுக்கள் எதுவும் சுமத்தப்படாமலேயே சிறைவாசம் என்ற தண்டனையை அனுபவித்து வருகின்றார்கள். குற்றச்சாட்டுக்கள் இருந்தால் முன்வைத்து விசாரணைகள் நடத்த வேண்டும் அல்லது தங்களை விடுதலை செய்ய வேண்டும் என நீண்ட காலமாகக் கோரி வருகின்றார்கள்.
அதேநேரம் இவர்களுக்காக அவர்களின் பெற்றோரும், மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புக்களைச் சேர்ந்தோரும் குரல் கொடுத்து வருகின்றார்கள். ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்கைப் போன்று அவர்களுடைய கோரிக்கைகளும் முயற்சிகளும் வீணாகியிருக்கின்றன. அரசாங்கம் இதுவிடயத்தில் காலத்துக்குக் காலம் சாக்கு போக்குகளைக் கூறி தட்டிக் கழித்து வருகின்றதே தவிர, அவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வரவே இல்லை.
மறுபுறத்தில் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களாகவும் அரசாங்கத்திற்கு எதிரான யுத்தச் செயற்பாடுகளில் முக்கிய பங்கேற்றுச் செயற்பட்டவர்களாகவும் உள்ளவர்களை அரசாங்கம் சுய அரசியல் இலாபத்திற்காக சொகுசாக வாழ வைத்திருக்கின்றது. பலரும் இதைச் சுட்டிக்காட்டி நியாயம் கேட்டுள்ள போதிலும் அரசாங்கம் அதுபற்றி அலட்டிக் கொள்வதாகவே தெரியவில்லை.
இவற்றுக்கெல்லாம் மேலாக யுத்தத்தினால் இடம்பெய்ந்தவர்களை சரியான முறையில் மீள்குடியேற்றம் செய்யாமல், இடம் பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களின் காணிகளை இராணுவ தேவைக்காக அபகரித்து, அவர்களை நட்டாற்றில் கைவிட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் துயரமடைந்திருக்கின்றார்கள். இந்த அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்திருக்கின்றார்கள்.
மீள்குடியேற்றப் பகுதிகளில் இராணுவத்தை நிலைகொள்ளச் செய்து சிவில் கட்டமைப்புக்களில் அவர்களையும் உள்வாங்கி, இராணுவத்தினரின் மேலாதிக்கமுள்ள புதுவகையான சிவில் நிர்வாகம் ஒன்றை அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது. மறு புறத்தில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாகக் கூறி வடமாகாணத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்திய அரசாங்கம், அந்தத் தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை, அதிகார பலமுள்ள நிலையில் ஆட்சி நடத்த விடாமல் இடையூறுகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த பின்னணியில் தமிழ் மக்கள் அரச தரப்பினர் மீது மிகவும் மனக்கசப்படைந்திருக்கின்றார்கள். அத்தகைய ஒரு நிலையில் அரசாங்கத் தரப்பினருக்கு ஆதரவளிக்குமாறு கூட்டமைப்பினால் கோர முடியுமா என்பது சந்தேகமே. இந்தத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதைத் தீர்மானிப்பதென்பது, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு இப்போதைய நிலையில் மிகவும் சிக்கலான விடயமாகவே காணப்படுகின்றது.
இந்த நிலையில் தமிழ் மக்கள் தாங்களாகவே ஒரு முடிவை எடுத்து, அதற்கேற்ற வகையில் வாக்களிக்கலாம் என்று சில வேளைகளில் தமிழ்த்தேசிய கவே ஒரு முடிவை எடுத்து, அதற்கேற்ற வகையில் வாக்களிக்கலாம் என்று சில வேளைகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கூறலாம். அல்லது எதிரணியினர் மீது நம்பிக்கை வைத்து தீர்மானமொன்றுக்கும் வரலாம். அத்தகைய ஒரு நிலைமையையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் மூன்றாவது ஜனாதிபதி பதவிக்கான இந்த ஜனாதிபதி தேர்தல் தோற்றுவித்திருக்கின்றது.