இலங்கை ஜனாதிபதித் தேர்தல் பிற்போடப்படாது-தேர்தல் ஆணையாளா்
இலங்கையில் நிலவும் மோசமான காலநிலையால், வரும் 8ம் நாள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று, இலங்கையின் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுமாறு எந்தவொரு வேட்பாளரிடம் இருந்தோ, அவர்களின் முகவர் அல்லது சட்டவாளரிடம் இருந்தோ வேண்டுகோள்கள் ஏதும் விடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால், தேர்தல் பிற்போடப்படலாம் என்று நேற்று ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்த நிலையிலேயே, இலங்கை தேர்தல் ஆணையாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் தொடர்ந்தும் கொண்டும் மழையினால், 89 வீதமான குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன.இதனால், குளங்கள், மற்றும் அணைக்கட்டுகளுக்கு அருகில் குடியிருப்போரை, உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டு, 31 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 10 பேர் வரை காணாமற்போயுள்ளனர்.தொடர்ந்து மழை கொட்டி வருவது, தேர்தல் நடவடிக்கைகளைப் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.