இராணுவ முகாம்களை அகற்றும் கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்தார்.
தேர்தலுக்கு முன்னர் வடக்கு இராணுவ முகாம்களை அகற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக வடக்கு இராணுவ முகாம்களை 50 வீதத்தினால் குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்ட இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த நிராகரித்துள்ளார்.தேசியப் பாதுகாப்பு தொடர்பிலான விவகாரங்களில் எந்தவொரு தரப்புடனும் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட மாட்டாது.
கடுமையான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 90 விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்குமாறு சில தரப்பினர் கோரியுள்ளனர்.
இந்த கோரிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். மேலும், கடுமையான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக விசேட நீதிமன்றின் மூலம் வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை செய்யப்பட உள்ளது என சிங்களப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதேவேளை, பொது வேட்பாளர் மைத்திரிபாலவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதாக கூறப்படும் இரகசிய உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களையே ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை போலியானது என மைத்திரிபால மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் முறைப்பாடு செய்துள்ளனர்.இராணுவ முகாம்களை அகற்றுமாறும், வடக்கு கிழக்கை இணைக்குமாறும் பல்வேறு தரப்பினர் கோரியதாக அரசாங்கத் தரப்பு தெரிவித்த போதிலும் யார் கோரினார்கள் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.