கேட்ட தொகை தரவில்லை-விக்னேஸ்வரன்
வட மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக நிதி ஆணைக்குழுவிடம் 149.95 மில்லியன் ரூபாவைக் கேட்டோம். ஆனால் வெறுமனே 27.2 மில்லியன் ரூபா மட்டுமே கிடைத்துள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டை விட 2015 ஆம் ஆண்டு எங்களுக்கு சவால் மிகுந்த ஆண்டாக அமையப்போகின்றது. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்துக்கு சில விசேட தேவைகளை அடிப்படையாகக் கொண்டு அதிக நிதியைக் கேட்டோம். ஆனால் நிதி ஆணைக்குழு அதனை எமக்கு வழங்க மறுத்து விட்டது. இதனால் சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
வீதி அபிவிருத்திக்காக நாம் கேட்டதோ 77 கோடி ரூபா ஆனால் எமக்கு தரப்பட்டதோ 7.4 கோடி ரூபாவே. நாம் கேட்டதில் 10 இல் ஒரு பங்கு கூட இல்லை. வீடமைப்புக்காக ஒரு கோடி ரூபா கேட்டிருக்க 50 இலட்சம் ரூபாவும், சுற்றுலாத்துறைக்காகக் கேட்ட 5 கோடி ரூபாவுக்குப் பதிலாக 3.6 கோடி ரூபாவுமே தந்தனர். சமூக சேவைகளுக்கு 9.2 கோடி ரூபா கேட்டிருக்க 2.2 கோடி ரூபாவும், கூட்டுறவு அபிவிருத்திக்காக 14.4 கோடி ரூபா கேட்டிருக்க 60 இலட்சம் ரூபாவுமே கிடைத்தன.
திண்மக் கழிவகற்றலுக்கு நாம் கேட்ட தொகையை விட 20 இலட்சம் ரூபா கூடுதலாக 2.2 கோடி ரூபாவும், கிராமிய அபிவிருத்திக்கு 50 இலட்சம் ரூபா அதிகமாக 60 இலட்சம் ரூபாவும் நிதி ஆணைக்குழு தந்தது.
நாம் நிதியே கேட்காத சந்தை அமைத்தலுக்கு 2.3 கோடி ரூபாவும், சமூக நீர் வழங்கல், மயான அபிவிருத்திக்கு தலா 1.5 கோடி ரூபா தந்துள்ளனர். இதேபோன்றே தகைமை அபிவிருத்திக்கு 10 இலட்சம் ரூபா தந்தனர். ஆனால் நாம் 12 கோடி ரூபா தேவை எனக் கேட்ட உள்ளூராட்சி சேவைகளுக்கு நிதியே தரவில்லை. எல்லாமாக நாம் 149.95 கோடி ரூபாவைக் கேட்டிருந்தோம். ஆனால் எங்களுக்குக் கிடைத்ததோ 27.2 கோடி ரூபாவே. இந்த நிதியைக் கொண்டே எங்கள் மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.