விடுதலைப் புலிகளை மறந்துவிட முடியாது- மகிந்த
எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
சிலாபத்தில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,“இந்த இரகசிய உடன்பாடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை உள்ளடக்கிய குழுவினருடன் செய்து கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். இந்த இரகசிய உடன்பாடு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.விடுதலைப் புலிகள் என்ன செய்தார்கள் என்பதை பொதுமக்கள் மறந்து விடக் கூடாது. அவர்கள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், வெளிநாடுகளில் உள்ள புலிகள் ஆதரவு குழுக்கள் அடுத்த மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் நான் தோற்கடிக்கப்படுவதைக் காண விரும்புகின்றன.அதன் மூலம் என்னை ஹேக்கில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்கு எத்தனிக்கிறார்கள்.
இங்குள்ள இலங்கையர்கள் எவரையும், ஹேக்கிற்கு இழுத்துச் செல்லப்படுவதற்கு நான் அனுமதிக்கமாட்டேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.