மைத்திரிக்கு ஆதரவாக கூட்டமைப்பு கலந்துரையாடல்
ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சிலர் இன்று முக்கிய கலந்துரையாடலொன்றை வவுனியாவில் நடாத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, இ.இந்திரராஜா, புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர் சந்திரகுலசிங்கம், சுத்தானாந்தா இந்து இளைஞர் சங்க தலைவரும் தமிழரசுக் கட்சி மத்தியகுழு உறுப்பினருமான ந.சேனாதிராஜா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உபதலைவர் து.ரவி உள்ளிட்ட பலர் ஒன்றுகூடி ஆராய்ந்துள்ளனர்.
இந்த கூட்டத்தில், வன்னி தேர்தல் தொகுதிக்கென நியமிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ந.சேனாதிராஜா தலைமையில் இடம்பெறவுள்ள பிரசார நடவடிக்கைகளை கூட்டமைப்பு தீவிரமாக மேற்கொள்ளும் என்று தீர்மானித்துள்ளது எனத் தெரியவருகிறது
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிப்பது என தெளிவாக அறிவிக்காத நிலையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.