Breaking News

சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களை அழிக்க முயற்சி-சி.வி.விக்னேஸ்வரன்

தமிழர்களை அழிக்க பல்வேறு வழிகளிலும் சதி முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.



2009-ம் ஆண்டுடன் போர் முடிவுற்றது என்ற வெளித் தோற்றம் நாட்டில் சமாதானம் நிலவுவதாக காட்டி நிற்கிறது.ஆனால் தமிழர்கள் இன்னுமொரு விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்து விடக்கூடாது என்பதில் சிங்கள ஆட்சியாளர்கள் மிகத் தீவிரமாக உள்ளனர்.அதற்காக தமிழினத்தை - தமிழ்ச் சமூகத்தை எந்தெந்த வழிகளிலெல்லாம் பின்னடைய வைக்க முடியுமோ அவை அனைத்தையும் தென்பகுதி ஆட்சிப்பீடம் செய்து வருகிறது.அதில் முக்கியமானது மாணவர்களிடையே போதைவஸ்துப் பயன்பாடாகும்.

போருக்குப் பின்பான எங்கள் நிலைமை எப்படி உள்ளதென்று ஒரு கணம் ஆராய்ந்தால், எங்கள் பணம் சாராயத்திற்கும் போதைப் பொருளிற்கும் தொலைபேசிக்கும் சோடாவுக்குமாக அழிந்து போக, எங்கள் உழைப்பாளர்களின் ஊதியம் லீசிங் கம்பனிகளுக்காகி விடுகின்றது.

பகலிரவாக உழைத்து லீசிங் கட்டி முடிக்க முடியாமல் உழைத்த பணத்தையும் இழந்து சொத்தையும் பறிகொடுத்த பரிதாபங்கள் தமிழ் மண்ணில் தாராளம்.இவை தற்கொலைகளாக, தலைமறைவுகளாக குடும்ப உடைவுகளாக மாற்ற மடைந்துள்ளன.

2009-ம் ஆண்டு போர் முடிந்து ஏ9 பாதை போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்ட போது வடபுலத்திற்கு அதிரடியாக வந்திறங்கியவை லீசிங் கம்பனிகள் எனில் அவை தமிழ் மக்களை வாழ வைப்பதற்காகவல்ல.மாறாக அந்தக் கம்பனிகளின் வருகை எதற்கானதென்பதை இப்போதைய நிலைமை வெளிப்படுத்தி நிற்கும்.

போரினால் எங்கள் மண் அழிந்து போயிற்று. நாங்கள் கண்ணீர் விட்டு வளர்த்த பயன்தரு மரங்கள் தறிபட்டும் தலை துண்டிக்கப்பட்டும் இறந்து போயின. இந்நிலையில் தென்பகுதியில் சந்தன மரமும் தேக்கு மரமும் நாட்டப்படுவதற்கு உங்கள் நிதியைத் தாருங்கள் என்று கேட்ட பரிதாபங்கள் எங்கள் அரசியல் தலைவர்களிடம்,  புத்திஜீவிகளிடம் இருந்த பலவீனம் அல்லவா?

பளையில், முகமாலையில், எழுதுமட்டுவாழில், கிளிநொச்சியில், முல்லைத்தீவில் தென்னை மரங்கள் அழிக்கப்பட்டன.உங்கள் மண்ணில் தென்னைகளை மீள நடுங்கள். மானியங்கள் தருகிறோம்; வட்டியில்லாக் கடன் தருகிறோம் என்று ஓடிவராத அமைப்புகள் தென் பகுதியில் சந்தன மரமும் தேக்க மரமும் நடுவதற்கு நிதி வேண்டி, எல்லாம் இழந்த எங்களிடம் வந்தன என்றால் இவை தமிழினத்தை அழிக்க எத்துணை சதி என்பதை சொல்லவா வேண்டும்?

ஆக, வடக்கின் முதலமைச்சர் கூறிய விடயம் அனைவருக்கும் தெரிந்ததே. அதிலும் அரசியல்வாதிகளை விட பொதுமக்கள் இதனை நன்கு அறிந்திருந்தனர்.

கடந்த 30 ஆண்டு கால விடுதலைப் போராட்டத்தை நடத்திய இனத்தின் எதிர்காலத்தை அழிக்க பேரினவாதம் கடும் பிரயத்தனம் எடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

எனவே எம்மை அழிக்க எதிரிகள் முன்னெடுக்கும் சதி முயற்சிகளைத் தவிடு பொடியாக்க நாங்கள் எடுத்த முயற்சிகள் என்ன என்பதுதான் இப்போது முன்னெழ வேண்டிய கேள்வியாகும்.எதிரியை குற்றம் சாட்டுவதை விடுத்து எங்களை நாங்கள் பாதுகாக்க வியூகம் அமைக்க வேண்டும்.

இதனைச் செய்வது தமிழ் அரசியல்வாதிகளினதும் தமிழ்ப் புத்திஜீவிகளினதும் தலையாய கடமை.எங்கள் மாணவர்களிடையே போதைப்பாவனை என்றால் நாங்கள் என்ன செய்து கொண்டிருந்தோம் என்று கேட்பது கட்டாயமானதல்லவா?தேர்தல் காலத்தில் மட்டும் தமிழ் அரசியல்வாதிகள் வடக்கில் முகாமிட்டு, மேடையேறி,  உரத்துக் கத்தி விட்டால் எல்லாம் சரிவரும் என்று நினைக்கலாகாது.

வினைத்திறனுடைய செயல்திட்டங்கள், இளைஞர் அணிகள், மாணவர் மன்றங்கள் உருவாக்கப்பட்டு வழிப்படுத்தப்பட வேண்டும்.இதைச் செய்யாவிட்டால் எதிரியின் இலக்கு எளிதில் அடையப்படும்.