Breaking News

வரவுசெலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம்--மாகாணசபை உறுப்பினர்கள்


வடமாகாணசபை அமைச்சரவை தீர்மானங்களை எமக்கு தெரியப்படுத்தாவிட்டால் 2015ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம் என மாகாணசபையில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
மாகாணசபை அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை தமக்கும் தெரியப்படுத்துங்கள் என மாகாணசபை உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மேற்படி தீர்மானங்கள் வழங்கப்படாமல், தொடர்ந்தும் காலதாமதம் காட்டப்பட்டு வரும் நிலையில்,  நேற்றைய 20வது அமர்வில் பேசிய மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் விந்தன் ஆகியோர் குறித்த தீர்மானங்களை எமக்கு தாருங்கள் அல்லது இணையங்களில் வெளியிடுங்கள் எனக்கேட்டனர்.

ஆனால் அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், குறித்த கூட்டம் சபை அமர்விற்கு முதல்நாள் மாலை நடைபெறுவதனால் ஒரு இரவுக்குள் அதனை எடுத்து கொடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே நீங்கள் அதனை பின்னர் வந்து பார்க்கலாம் என கூறினார்.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மேற்படி உறுப்பினர்கள் அமைச்சரவை கூட்டத்தை சபை அமர்வுக்கு சில நாட்களுக்கு முன்பாகவே நடத்தி அதன் தீர்மானங்களை உறுப்பினர்களுக்கு கொடுங்கள், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு அடுத்த அமர்வில் எமக்கு அந்த தீர்மானங்கள் தரப்படாவிட்டால் 2015ம் ஆண்டு வரவுசெலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் நிர்ப்பந்தத்திற்கு நாம் தள்ளப்படுவோம் என தெரிவித்துள்ளனர்.