வரவுசெலவுத் திட்டத்தில் நிதி பற்றாக்குறை
வடக்கு மாகாணசபையின் அடுத்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில், 2222.4 மில்லியன் ரூபா பற்றாக்குறை இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபையின் நேற்றைய அமர்வின் போது, 2015ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தொடர்பான நிதிக்கூற்று அறிக்கையை அவர் சமர்ப்பித்தார்.இதன்படி, வடக்கு மாகாணசபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நடைமுறை மற்றும் மீண்டெழும் செலவுகள் 15,122.4 மில்லியன் ரூபாவாக இருக்கும்.
இதனை ஈடுசெய்வதற்கு, மத்திய அரசிடமிருந்து 12,800 மில்லியன் ரூபா கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதேவேளை, பற்றாக்குறையை ஈடுசெய்ய மாகாணசபை வருமானம் மூலம் 347.4 மில்லியன் ரூபா கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும், மத்திய அரசிடம் இருந்து, 1,975 மில்லியன் ரூபாவைத் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிதிக்கூற்றை சபையில் அங்கீகரிக்கும்படி கோரி வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் முதலமைச்சர் கையளித்தார்.
அமைச்சர்களுடன் மாத்திரம் கலந்துரையாடி மூலதன செலவுகள் விபரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பாக முழு விளக்கம் தங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, முழு அறிக்கை தருமாறும் முதலமைச்சரிடம் கோரிய அவைத் தலைவர், 2015ஆம் ஆண்டுக்கான நிதிக்கூற்றை ஏற்றுக்கொள்வதாக கூறியதுடன், வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடலொன்று இன்று முதலமைச்சர் செயலகத்தில் நடைபெறவுள்ளதாகவும் கூறினார்.