Breaking News

தமிழ்ச்செல்வன் படுகொலை துரோகத்தனம்– விக்கிலீக்ஸ்

விடுதலைப் புலிகளின் அரசியல் பேச்சாளர் சு.ப.தமிழ்ச்செல்வனும் ஏனைய தலைவர்களும் துல்லியமான இலங்கை இராணுவக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டதற்கு, தலைவர் பிரபாகரனின் முன்னாள் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் தரையில் இருந்து வழங்கிய தகவல்களே காரணம் என்று சிஐஏ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.



இலங்கை  உள்ளிட்ட நாடுகளில் கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளின் போது, உயர் பெறுமான இலக்குகளை படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பான, அமெரிக்க புலனாய்வு அமைப்பின் இரகசிய அறிக்கை ஒன்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

2009ம் ஆண்டு ஜுலை மாதம் 7ம் நாள் இடப்பட்டுள்ள 21 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான சிஐஏயின், நாடுகடந்த விவகாரங்களுக்கான பிரிவினால் ‘கிளர்ச்சி முறியடிப்பில் மிகச்சிறந்த நடைமுறைகள்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில்,(2001- ஜூன் 2009), அல்ஜீரியாவில் (1954-1962), கொலம்பியாவில் (2002-ஜூன் 2009), ஈராக்கில் (2004- ஜூன் 2009), இஸ்ரேலில் (1972 தொடக்கம்1990களின் நடுப்பகுதி, 1990களின் நடுப்பகுதி தொடக்கம், 2009 ஜூன் வரை), பெருவில் (1980-1999), வடஅயர்லாந்தில் (1969-1998) மற்றும் இலங்கையில் (1983 – மே 2009) கிளர்ச்சி முறியடிப்பில், உயர்பெறுமான இலக்குகள் குறிவைக்கப்பட்ட விதம் குறித்து இதில் விபரிக்கப்பட்டுள்ளது.

மேலும், செசனியா, லிபியா, தாய்லாந்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும் சிஐஏயின் இந்த இரகசிய அறிக்கையில் உதாரணம் காட்டப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் கிளர்ச்சியை முறியடிக்க, இலங்கை அரசாங்கம், புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் அவருக்கு நம்பிக்கையானவர்களைக் கொலை செய்வதற்கு 1983ம் ஆண்டு தொடக்கம், 2009 மே வரையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்த இரகசிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளை மோசமான அதேவேளை, மிகவும் புத்திசாதுரியமான, இனத் தேசியவாத அமைப்பாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முதற்கட்ட இரகசியத் தகவல்கள் கிடைத்ததையடுத்து. புலிகளின் தலைவர் பிரபாகரனையும், முக்கிய தலைவர்களையும் கொல்வதற்கு, இலங்கை அரசாங்கம் தனது விமானப்படை மூலம், பதுங்குகுழிகளை அழிக்கும் குண்டுகளைப் பயன்படுத்தி, 2007 நவம்பரிலும், 2008 ஜனவரியிலும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2007 நவம்பர் 2ம் திகதி விடுதலைப் புலிகளின் அரசியல் பேச்சாளர் சு.ப.தமிழ்ச்செல்வனும் ஏனைய தலைவர்களும் துல்லியமான இலங்கை இராணுவக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டதற்கு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் முன்னாள் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் தரையில் இருந்து ஒருங்கிணைத்து வழங்கிய தகவல்களே காரணம் என்று இரகசிய அறிக்கை ஒன்று கூறுவதாகவும் சிஐஏ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தலைமைத்துவத்தில் உள்ள அதிருப்தியைப் பயன்படுத்தி, முரண்பாடுகளைத் தூண்டிவிட்டு, பிளவுகளை ஏற்படுத்துவதன் மூலம், உயர் பெறுமான இராணுவ இலக்குகளை நெருங்கலாம் என்றும் சிஐஏயின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் கேணல் கருணாவுக்கும், விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் திறமையாகப் பயன்படுத்தி,  இலங்கை அரசாங்கம் அடைந்த பலன்களையும் சிஐஏயின் இந்த அறிக்கை உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளது.