Breaking News

பாப்பரசாின் விஜயத்தை அரசியலாக்க வேண்டாம்-ரஞ்சித் ஆண்டகை

புனித பாப்பரசரின் இலங்கை விஜயத்தை அரசியல் மயப்படுத்த வேண்டாமெனவும் பாப்பரசர் அரசியலுக்கு அப்பாற்பட்ட மதத் தலைவர் என்பதை சகல அரசியல் கட்சிகளும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமெனவும் அதி. வணக்கத்துக்குரிய கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2014ம் ஆண்டுக்கான நத்தார் பண்டிகை தொடர்பில் நேற்றுக் கொழும்பில் நடைபெற்ற தபால் உறை வெளியிடப்பட்ட வைபவத்தின் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
புனித பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வதற்குத் தீர்மானித்தமை பற்றி இலங்கையர்களான நாம் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும்.

புனித பாப்பரசர் அரசியலுக்கு அப்பாற்பட்ட, உலகெங்குமுள்ள 80 கோடி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு மதத் தலைவர்.

அவர் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் எவ்விதத்திலும் அரசியல் தொடர்பு கொண்டதல்ல.

இன்று உலகில் அபிவிருத்தியடைந்துள்ள செல்வந்த நாடுகளின் பிரதான வருமானம் ஆயுதங்களை விற்பதாலேயே கிடைக்கிறது.

அந்த நாடுகள் சமாதானத்தை விரும்புவதில்லை. சமாதானம் நிலவும் நாட்டுக்கு அவர்களால் ஆயுதங்களை விற்க முடியாது.

இலங்கையிலும் அவ்வாறான அமைதியின்மையை உருவாக்குவதில் பல செல்வந்த நாடுகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.

30 வருட யுத்தம் முடிந்து இப்போது நாம் அமைதியாக வாழ்கிறோம்.

அரசியல் குரோதங்களாலும் இந்த அமைதியை சீர்குலைக்க இடமளிக்கக்கூடாது.