ஹெல உறுமயவுக்கு கோத்தா பதிலடி
இறுதிக்கட்டப் போருக்கு சிறிலங்கா அதிபருக்கு அழுத்தம் கொடுத்தது தாமே என்ற ஜாதிக ஹெல உறுமயவின் உரிமை கோரலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்
.
ஹோமகமவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.“சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே இறுதிப் போரின் காலத்தை தீர்மானித்தார்.அதனைச் செய்வதற்கு யாரும் அவரிடம் கேட்கவில்லை. அது சிறிலங்கா அதிபரால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் ரீதியான முடிவு.அதிபரின் செயலராக லலித் வீரதுங்க நியமிக்கப்பட்ட பின்னர், பாதுகாப்புச் செயலராக என்னை நியமித்தார் சிறிலங்கா அதிபர்.யாரும் அவரிடம் அதைச் செய்யுமாறு கேட்கவில்லை. அது அவருடைய சொந்த முடிவு.
அப்போது அவர் ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் திட்டம் ஒன்றைத் தயாரித்தார்.அதனை அடிப்படையாக வைத்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார்.அந்தக் கலந்துரையாடல்களை அடுத்து, சமாதானத்துக்கு அவர் ஒரு வாய்ப்பை வழங்கும் வகையில், முதல் நடவடிக்கையாக விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தினார்.ஏனைய எல்லா வாய்ப்புகளும் அடைக்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் போரைத் தொடங்கினார்.
போரில் பெற்ற வெற்றிக்கு எந்தவொரு கட்சிக்கும் உரிமை கொண்டாட முடியாது.அது மகிந்த ராஜபக்சவின் மூளையில் உதித்த குழந்தை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.