விழுந்து நொறுங்கியது இந்தோனேசியா விமானம்
இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் கிழக்கு பெலிடங் தீவுப்பகுதியில் கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசிய தேசிய தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பை (பசார்னஸ்) சேர்ந்தவர்கள், பங்கா பெலிடங் பகுதியிலிருந்து விமானம் விழுந்து கிடக்கும் கிழக்கு பெலிடங் கடற்பகுதிக்கு விரைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பசார்னஸ் அமைப்பின் தலைவரான ஜோனி சுப்பெரியாடி பெலிடங் கடற்பகுதிக்கு விரைந்து கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக நியூ ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் இணைய செய்தி தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று அதிகாலை 5:20 மணிக்கு சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் க்யூ. இசட். 8501, காலை 6:17 மணியளவில் ஜகார்தா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பிலிருந்து விடுபட்டது. இந்த விமானத்தில் 155 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களும் இருந்தனர்.
அதில் 16 சிறுவர்களும், 1 குழந்தையும், இரண்டு விமானிகளும், 5 விமான பணியாளர்களும் அடங்குவார்கள். பயணிகளில் ஒருவர் சிங்கப்பூரை சேர்ந்தவர் என்றும், 3 பேர் கொரியாவை சேர்ந்தவர்கள் எனவும், 157 பேர் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் மலேசியாவை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
விமான கட்டுப்பாட்டு மையத்துடன் விமானத்தின் தொடர்பு விடுபடுவதற்கு முன், தனது வழக்கமான பாதையில் போவதை விட்டு, வேறு பாதையில் போக அனுமதி கோரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விமானம் தொடர்பை விட்டு விலகும் போது கலிமந்தனுக்கும் ஜாவா தீவுகளுக்கும் இடையே ஜாவா கடலில் மேலே 32000 அடி உயரத்தில் பறந்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.