Breaking News

நல்லதொரு தலைவரை எமக்கு இறைவன் தரவேண்டும் - மன்னார் ஆயர்

நாம் இந்த வேளையில் நல்லதொரு தலைவரை
எமக்கு இறைவன் தரவேண்டும் என அவரிடம் வரம் கேட்போம். ஏனென்றால் இன்றைய சூழலில் இந்த நாட்டில் சிறுபான்மை பெரும்பான்மை மக்களாக இருந்தால் என்ன எல்லா மக்களையும் சமத்துவமாக மனித மாண்புடன் வழி நடத்தும் தலைவரை இறைவன் எமக்குத் தர வேண்டும் என நாம் அவனை நோக்கி பிரார்த்திக்கவேண்டும்.

அதற்காக நீதிக்காகவும் அமைதிக்காகவும் நாமும் உழைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப். நேற்று நள்ளிரவு இயேசு பாலன் பிறந்த தினமான நத்தார் திருப்பலியின் போது மறை உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தனது உரையில் மேலும் நாம் ஒவ்வொருவரும் நீதிக்காக உழைப்போம். ஆண்டவரின் வாக்குறுதி நமக்கு உள்ளது. தொலைந்துபோன கைகளை திடப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி திடம்கொள்ளுங்கள்; அஞ்சாதிருங்கள். அநீதிக்கு பழிவாங்கப்படுவர்களை இறைவன் விடுவிப்பார் என்ற இறை நம்பிக்கையில் நாம் வாழ்வோம். 

அமைதியை உலகிற்கு கொண்டுவந்த ஒரு மாபெரும் நாள் இன்றைய கிறிஸ்து பிறப்புத் தினம். கடவுள் எம்மை எவ்வளவுக்கு அதிகமாக நேசிக்கின்றார் என்பதால் தனது ஒரே மகனை இவ்வுலகத்துக்கு அனுப்பினார் என நாம் திருவிவிலியத்தில் வாசிக்கின்றோம். அவர் அன்பின் அவதாரமாகவே இவ்வுலகத்துக்கு வந்துள்ளார். 

அவருடைய பிறப்பிலே பாடுப்பட்ட விண்ணகத் தூதர்களின் கீதம் உன்னதங்களிலே நல்மனதோருக்கு அமைதி உண்டாகுக என்பதாகும் ஆகவே இன்றைய தினம் அமைதியை கொண்டு வந்த நாளாகும். 

ஆகவே கிறிஸ்துவின் பிறப்பு விழா அன்பின் அவதாரத்தை நாம் எடுத்து அன்புக்காக அமைதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் நமது நாடு அதைக் கண்டடைய வேண்டும் என்று நாம் இவ்வேளையில் இறைவனிடம் வேண்டவேண்டும். 

அன்பும் அமைதியும் நமக்கு மட்டுமல்ல வீட்டில் கிராமத்தில் நாட்டிலுள்ள எல்லோருக்கும் தேவைப்படுகிறது என்பதை நீண்டநாட்கள் அனுபவத்தில் நாம் கண்டு வருகின்றோம் ஆகவே இப்படிப்பட்ட எம் மீட்பர் உலகத்துக்கு வந்து அன்பும் வழியும் அமைதியையும் பணித்தார் அதுதான் மகிழ்ச்சியின் வழி எனக் காண்பித்துள்ளார். 

போர் முடிந்த பிற்பாடும் இன்னும் எம் மக்கள் மத்தியில் அமைதி, மகிழ்ச்சி, சமாதானம், சுதந்திரம் அற்ற நிலையையே நாம் காண்கின்றோம். அண்மையில் நான் இந்திய துணைத் தூதுவருடன் உரையாடியபோது எமது மக்களின் நிலைமைகளைப் பற்றி கருத்துக்கள் பறிமாறிக் கொண்டேன். 

அப்பொழுது மக்களின் அவல நிலைமைகள் பற்றி தெரிவிக்கப்பட்டது. இப்பொழுது ஆட்சி தலைவரை தெரிவுசெய்யும் நேரம் எமக்கு வழங்கப்பட்டுள்ளது. - என்றார்.