சென்னையில் மகிந்தவுக்கு எதிராக போராட்டம்
சென்னையில் இன்று இரண்டு இடங்களில் காலையில் ம.தி.மு.க.வினர் ராஜபக்சவின் கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பதிக்கு வருகை தந்த இலங்கை அதிபர் ராஜபக்சவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினர் மற்றும் அதனை படம் பிடித்த பத்திரிகையாளர்களை ஆந்திர பொலிஸார் இன்று காலையில் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர பொலிஸாரின் அத்துமீறலை கண்டித்து சென்னையில் இன்று காலையில் ம.தி.மு.க.வினர் 2 இடங்களில் ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவல்லிக்கேணி அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் ம.தி.மு.க. மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் ம.தி.மு.க.வினர் கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ம.தி.மு.க. நிர்வாகிகள் கழககுமார், குமாரி விஜயகுமார், பூங்காநகர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.இதே போல் எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினர் 20 பேரும் கைது செய்யப்பட்டனர்
இதனை தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம், ஏர்லைன்ஸ் நிறுவனம், எழும்பூரில் உள்ள புத்த மடம் ஆகியவற்றில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையில், ஏராளமான பொலிஸார் மேற்கண்ட இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள ஆந்திர நிறுவனங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் அலுவலகம், தேனாம்பேட்டையில் உள்ள ஆந்திரா கிளப் மற்றும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் ஆந்திர வங்கிகளிலும் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.