யாரை ஆதரிப்பது, அறிவித்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் -மாவை
ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குகின்றது என்ற அறிவிப்பினை தற்போது வெளியிட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா எச்சரித்துள்ளார்.
கிராம மட்டங்கள் தோறும் சென்று மக்களுடைய கருத்துக்களை பெற்றுக் கொண்ட பின்னர் நடைபெறும் கலந்துரையாடலில் பின்னரே இறுதி முடிவு பகிரங்கமாக வெளியிடப்படும்.அதற்கிடையில் இரகசிய பேச்சுவார்த்தை, உடன்படிக்கை கைச்சாத்து என்று கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுடைய ஆதரவு யாருக்கு வழங்கப்டும் என்ற அறிவிப்பினை மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜேன் செனவிரட்ண தெரிவித்திருந்தார்.
இவ்விடையம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான செய்திகள் தற்போது சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் உருவெடுக்கின்றார்கள், இலங்கையில் சர்வதேசத்தின் சதி நடக்கின்றது, இரகசிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படுகின்றது என்றெல்லாம் பலர் கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.
ஆனால் இவ்வாறு இவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் அனைத்தும் முழுமையான பெய்யாகவே உள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான முடிவுகள் எதனையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இவ்வாறான கருத்துக்கள் வெளிவருவது கவலை அழிக்கின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை தற்போது வெளியிட்டால் அது பாரதூரமான பல பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது சம்மந்தமான கலந்துரையாடல்கள் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது.அதற்கு முன்னதாக வட, கிழக்கில் கிராம மட்டங்களில் இருந்து ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான மக்களுடைய கருத்துக்களை பெறவிருக்கின்றோம்.
அக்கருத்துக்களைக் கொண்டும் அனைத்துத் தரப்பினர்களுடன் கலந்து பேசியுமே ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும்.அவ்வாறு எடுக்கப்படும் முடிவும் பகிரங்கமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.