Breaking News

ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு நிராகாிப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வேண்டுமென்றே நாட்டின் அரசியல் சாசனத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாக தெரிவித்து தேசிய சிங்கள பௌத்த மக்கள் கட்சியின் தலைவர் ரதன பண்டார உச்ச நீதிமன்றில் இன்று மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அவர் இந்த மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.
18ம் திருத்தச் சட்டம் வெகுசன வாக்கெடுப்புக்கு எடுக்கப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இது அரசியல் சாசனத்திற்கு முரணானது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதியாக பதவி வகிக்க தகுதியற்றவர் எனவும், உடனடியாக அவரை பதவியிலிருந்து விலக்க வேண்டுமெனவும் கோரியிருந்தார்.
அந்தப் பதவிக்கு பிரதமர், சபாநாயகர் அல்லது எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரில் ஒருவரை நியமிக்க முடியும் என்ற போதிலும், சபாநயகரும், பிரதமரும் இந்த சட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்டதாவும், எதிர்க்டக்சித் தலைவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய வேண்டுமென கோரும் காரணத்தினால் ஜனாதிபதிப் பதவியை தம்மிடம் வழங்குமாறு மனுவில் ரதன பண்டார கோரியுள்ளார்.
இந்த மனு சுயலாப நோக்கில் தாக்கல் செய்யப்படவில்லை எனவும், பொதுநல நோக்கில் தாக்கல் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறெனினும், பொதுமக்களின் நலனை கருத்திற் கொண்டு இவ்வாறு மனு தாக்கல் செய்வது வரவேற்கப்பட வேண்டிய விடயம் என பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார்.எனினும், வழக்கு விசாரணை செய்வதற்கு போதிய சட்ட ஏதுக்கள் குறிப்பிடப்படாத காரணத்தினால் வழக்கை நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.