சிவாஜிலிங்கம் கவலை தெரிவிக்க மறுப்பு
வடமாகாணசபையின் 20வது அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்கிவீசிய சம்பவம் தொடர்பில் சபையில் கவலை தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையினை சிவாஜிலிங்கம் மறுத்துள்ளதுடன், நடவடிக்கை எடுங்கள் கவலை தெரிவிக்க மாட்டேன். என பதில் வழங்கியுள்ளார்.
கடந்த 20வது அமர்வின் தொடர்ச்சியான அமர்வு இன்றைய தினம் மாகாணசபையின் சபா மண்ட பத்தில் நடைபெற்றிருந்தது.இதன் போது கடந்த அமர்வில் சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்கி வீசிய சம்பவம் தொடர்பில் சபையில் கவலை தெரிவிக்குமாறும், உடைந்த செங்கோலை திருத்தியமைப்பதற்கான 5 ஆயிரம் ரூபா பணத்தை சபைக்கு வழங்குமாறும், அவைத்தலைவர் கேட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த சிவாஜிலிங்கம் தமிழ் மக்கள் மீது நடைபெற்றது. இன அழிப்பு என்பதையே நான் கேட்டிருந்தேன். ஆனால் எனது முன்மொழிவை சபையில் எடுத்துக் கொள்ளாமல் காலம் தாழ்த்தினீர்கள், மேலும் எதிர்வரும் தை மாதம் அது நிறைவேற்றப்படும் என தாங்கள் வழங்கிய உறுதிமொழி மீதும் எனக்கு நம்பிக்கையில்லை.
எனவே நான் சபையில் கவலை தெரிவிக்கப் போவதில்லை. என்பதுடன், உடைந்த செங்கோலை திருத்தியதற்கான பணத்தினையும் வழங்க மாட்டேன். என பதிலளித்தார். இதற்கு முன்னதாகவே செங்கோலை திருத்திய பணத்தை சிவாஜிலிங்கம் செலுத்தாவிட்டால் தாம் செலுத்துவோம் என அவைத்தலைவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் சிவாஜிலிங்கம் வடமாகாண மக்களின் இறையாண்மையின் அடையாளமாக இருக்கும் செங்கோலை தூக்கி வீசி மக்களுக்கு அவமரியாதை உண்டு பண்ணியமைக்கான தீர்ப்பினை மக்களே வழங்குவார்கள். என தெரிவித்த அவைத்தலைவர் நான் பல படிகள் கீழ் இறங்கி கவலை தெரிவிக்குமாறு கோரியதையும் சிவாஜிலிங்கம் மறுத்தமை, கவலைக்குரிய விடயம் எனவும் சபையில் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து முதலமைச்சர் குறித்த முன்மொழிவதை அனைவரும் இணைந்து நிறைவேற்றுவோம். என பதில் வழங்கினார்.இதற்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் சிவாஜிலிங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சபையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என கோரின.
ஆனால் ஆளும் கட்சி உறுப்பினர்களான விந்தன் மற்றும் அன்ரனி ஜெயநாதன் ஆகியோர் அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால் ஆளும் கட்சி இரண்டாக உடையும் நிலை உருவாகும் என எச்சரித்தனர்.எனினும் இறுதியில் சிவாஜிலிங்கத்தின் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சபை எதிர்வரும் 17ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது