Breaking News

கேபியை விசாரிக்க உதவியை நாடுகிறது சி.பி.ஐ

ராஜீவ்காந்தி கொலை வழக்கில், குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்துவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காத நிலையில், இந்திய மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) அனைத்துலக காவல்துறையின் உதவியை நாடியுள்ளது.


குமரன் பத்மநாதனைக் கைதுசெய்வதற்கு சிபிஐ ஏற்கனவே அனைத்துலக காவல்துறையின் உதவியைக் கோரியிருந்தது.எனினும், இது தொடர்பான நடவடிக்கைகள் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.இந்தநிலையில், நீண்டகாலமாக இழுபறியாகவுள்ள இந்த வழக்கை, சிறிலங்காவில் இருந்து தகவல்களைப் பெற்று விரைவில் விசாரித்து முடிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது.

இந்த வழக்கில் சிபிஐயினால் தேடப்படும், குமரன் பத்மநாதன் மலேசியாவில் பிடிக்கப்பட்டு, 2012ம் ஆண்டு வரை கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தற்போது விடுவிக்கப்பட்டுள்ள அவர் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றை சிறிலங்கா அரசாங்கப் பாதுகாப்பின் கீழ் கிளிநொச்சியில் நிர்வகித்து வருகிறார்.

இந்த வழக்கில், சிறிலங்கா அரசாங்கத்திடம் ஒத்துழைப்பு வழங்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்தோம், தற்போது எமது கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கும்படி அனைத்துலக காவல்துறையிடம் கேட்டுள்ளோம் என்று, சிபிஐயின் மூத்த அதிகாரி ஒருவர், ரைம்ஸ் ஒவ் இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.

சிபிஐயினால் மேற்கொள்ளப்படுகின்ற – ஐபி மற்றும் றோ அதிகாரிகளை உள்ளடக்கிய பலநோக்கு கண்காணிப்புக் முகவரமைப்பின் விசாரணைகளை முடிப்பதற்கு, அண்மையில் ஒரு ஆண்டு கால அவகாசம் பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒருமுறை சிறிலங்காவில் வைத்து குமரன் பத்மநாதனிடம், பலநோக்கு கண்காணிப்பு முகவர் அமைப்பு அதிகாரபூர்வமற்ற விசாரணைகளை நடத்தியிருந்தது.

ஆனால், பலநோக்கு கண்காணிப்பு முகவர் அமைப்பு அவரைத் தடுத்து வைத்து, முறைப்படி விசாரணை நடத்தவுள்ளது.அதிகாரபூர்வமற்ற விசாரணையின் போது, ராஜீவ்காந்தி கொலைச் சதித்திட்டம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கேபி மறுத்திருந்தார்.

ஆனால் தம்மிடம் ஆதாரங்கள் உள்ளதாகவும், அவற்றை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு, கேபியை விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும் சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலைச் சதித்திட்டம் குறித்து, விசாரிக்க நியமிக்கப்பட்ட பலநோக்கு கண்காணிப்பு தமுகவர் அமைப்பு, இணை இயக்குனர் தலைமையில் 40 அதிகாரிகளைக் கொண்டதாக, கடந்த 16 ஆண்டுகளாக சிபிஐ தலைமையகத்தில் செயற்பட்டு வருகிறது.பலமுறை இந்த கண்காணிப்பு முகவர் அமைப்பின் காலஎல்லை நீடிக்கப்பட்ட போதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.