நெடுந்தீவு கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் கைது
யாழ்.குடாநாட்டுக் கடற்பகுதியில் தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் சில காலம் குறைவடைந்திருந்த நிலையில், இன்றைய தினம் மீண்டும் இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறிய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 45 இந்திய மீனவர்கள் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்றைய தினம் மாலை 5 மணியளவில் நெடுந்தீவு கடற்பகுதிக்கு அண்மித்த பகுதியில் 5 பாரிய படகுகளில் வந்த 45 இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கை கடற்படையின் ரோந்துப் படகுகள் அதனை அவதானித்ததுடன், உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்து குறித்த மீனவர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்றையதினம் மாலை யாழ்.கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இந்திய தூதரகத்திற்கும் விடயம் தெரியப்படுத்தப்பட்டது. இதனையடுத்து தூதரக அதிகாரிகளினால் உணவு மற்றும் உடைகள் வழங்கப்பட்டுள்ளது.குறித்த மீனவர்கள் நாளையதினம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படலாம் என கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.