ஆயுதமுனையில் காணிகளை அபகரிக்கும் படையினர்
வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை படையினர் ஆயுதமுனையில் அபகரிப்பது தொடர்பில் மாகாண காணி அமைச்சர் என்ற வகையில் மத்திய காணி ஆணையாளருக்கு ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்கள் முதலமைச்சரிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, விசுவமடு, தொட்டியடி, கிளிநொச்சிக்காடு, சுதந்திரபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களுடைய காணிகளை மக்களுடைய அனுமதியில்லாமல் அபகரித்து விட்டு அந்த நிலத்தின் உரிமையாளர்களை அடையாளம் காண முடியவில்லை என கூறி காணிகளை அபகரித்துள்ளனர்.
இதற்கும் மேலதிகமாக அந்தக் காணிகள் சுவீகரிக்கப்பட்டதாக வர்த்தமானி அறிவித்தலும் விடுக்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்த நடவடிக்கை இலங்கையின் அரசியலமைப்பை மீறும் சட்டத்திற்கு மாறான செயற்பாடாகும். அதாவது முறைகேடாக அபகரித்த காணிக்கு வர்த்தமானி அறிவித்தல் விடுவது அரசியல் யாப்பை மீறும் செயல் என சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும். என கோரினர்.இதேவேளை குறித்த காணி அபகரிப்பு அரசியல் யாப்பை மீறுவதாக இருந்தால் அதனை தாங்களும் எதிர்ப்போம் என எதிர்க்கட்சிகள் கூறியிருக்கின்றன.
இந்நிலையில் மாகாணசபை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதிலளித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், இந்த விடயங்களை ஒரு ஆவணமாக நாங்கள் தயாரித்தால் அதனை காணி ஆணையாளருக்கு நாங்கள் அனுப்பி வைக்க முடியும். மேலும் நீதிமன்ற தடையுத்தரவு பெறுவது பயனற்றது என நான் நினைக்கிறேன். ஏனெனில் முன்னதாக வலி, வடக்கு காணிப் பிரச்சினைக்காக தொடரப்பட்ட வழக்குகளிற்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
மேலும் இப்போது புதிதாக கொழும்பிலிருந்து ஆட்களையும் கருவிகளையும் கொண்டுவந்து காணிகளை அளப்பதாக தெரியவருகின்றது. எனவே இந்த விடயத்தில் நாங்கள் சில சிக்கல்களை சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். அதனடிப்படையில் முடிவெடுப்போம். மேலும் இந்தப் பிரச்சினையில் காணி ஆணையாளருக்கும், படையினருக்கு, நாங்கள் தொடர்ந்தும் ஆட்சேபணை தெரிவித்து வருகின்றோம். எதிர்காலத்திலும் அதனைச் செய்வோம் என முதலமைச்சர் தெரிவித்தார்.