அரசாங்கம் வரியை குறைக்க வேண்டும்-ஜே.வி.பி
தேர்தலுக்காக விலைகளை குறைக்காது அரசாங்கம் வரியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜே.வி.பி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கம் எரிபொருளுக்கான விலைகளை குறைத்துள்ளதாக ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பெலவத்தையில் அமைந்துள்ள கட்சித் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் பயனில்லை.எரிபொருளுக்கான விலைகளை குறைக்காது அறவீடு செய்யப்பட்டு வரும் பாரியளவிலான வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாங்கம் பாரியளவில் தேர்தல் விதி மீறலில் ஈடுபட்டு வருகின்றது.சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதியின் உருவப்படம் பொறிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான பதாகைகள் நாடு முழுவதிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர் அரசாங்கத்தை விட்டு வெளியேறிச் சென்றமை, ஜனாதிபதிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கம் கடுமையான வங்குரோத்து நிலைமையை அடைந்துள்ளது.சகோதரரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியல் மேடைகளில் ஏறி பேசுகின்றார்.தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசாங்கம் பாரியளவில் பணத்தை செலவிட்டு வருவதாக விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.