சுதந்திரக் கட்சியை உடைக்க சி.ஐ.ஏ முயற்சி – அரசு குற்றச்சாட்டு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பதற்கு, மேற்குலக நாடுகள் சதி செய்வதாகவும், அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சிஐஏ இதுபோன்ற வேலைகளைச் செய்வது வழக்கமே என்றும் அமெரிக்கா மீது நேரடியாக குற்றம்சாட்டியுள்ளது சிறிலங்கா அரசாங்கம்.
கொழும்பில் நேற்று சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், உரையாற்றிய, அமைச்சர்கள், டிலான் பெரேரா மற்றும், மகிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோர், நாட்டைக் குழப்பவும், கட்சிகளை உடைப்பதற்கும், மேற்குலக நாடுகள் சதி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
“சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பலம்வாய்ந்த தனிப்பெரும் கட்சியாக உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பதற்கு மேற்குலக சக்திகள் தம்மைப் பயன்படுத்துகின்றன என்பதைக் கூட, புரிந்துகொள்ளும் திறன் மைத்திரிபால சிறிசேனவுக்கு இல்லை.
ரணில் விக்கிரமசிங்கவை வைத்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டே, மேற்குலக சக்திகள் மைத்திரிபால சிறிசேனவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.