பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மகிந்த திருப்பதி பயணம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலத்த எதிர்ப்புகளுக்கிடையே இன்று மாலை இந்தியாவின் திருப்பதி ஆலயத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வருகையை ஒட்டி திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற பிரார்த்தனை செய்வதற்காக இன்று ஜனாதிபதி திருப்பதி செல்வதாகக் கூறப்படுகிறது.
தனி விமானம் மூலம் மாலை 4.30 மணிக்கு ரேணிகுண்டா செல்லும் ஜனாதிபதி மஹிந்த, அங்கிருந்து ஹெலிகொப்டர் மூலம் திருப்பதி செல்கிறார். இன்று இரவு அல்லது நாளை காலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
பின்பு, நாளை காலை 9 மணி அளவில் அவர் திருப்பதியில் இருந்து புறப்படுகிறார். ஜனாதிபதி மஹிந்தவின் வருகைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. போராட்டங்களுக்குக் கூட அவை அழைப்பு விடுத்துள்ளன.
எனவே, ஜனாதிபதியின் வருகையை ஒட்டி ரேணிகுண்டா விமான நிலையம், திருப்பதி மலைப்பாதைகள், வராக சுவாமி கோயில், தங்க ரதம் இருக்கும் பகுதி உள்ளிட்ட இடங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் வாகன தணிக்கை தீவிரமாக நடைபெற்று வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.