Breaking News

மகிந்தவுக்கு எதிராக அடுத்தகட்டப் போரைத் துவக்கினார் சந்திரிகா

மைத்திரிபால சிறிசேனவை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்குள் இருந்து வெளியே கொண்டு வந்து, எதிரணியின் பொதுவேட்பாளராக நிறுத்திய சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தனது போரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளார்.


நேற்று அத்தனகலவில் நடந்த கூட்டம் ஒன்றில், முன்னாள் துடுப்பாட்ட வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்கவை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல தொகுதி அமைப்பாளராக நியமிப்பதாக சந்திரிகா அறிவித்துள்ளார்.அத்தனகல தொகுதி பண்டாரநாயக்க குடும்பத்தின் சொந்த தொகுதியாகும்.

இந்த தொகுதி அமைப்பாளராக அர்ஜீன ரணதுங்கவை நியமிப்பதாக அறிவித்துள்ள சந்திரிகா, இந்தப் பதவிக்கு அவரைவிடப் பொருத்தமானவர் வேறெவரும் இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.போரில் ஈட்டிய வெற்றியை வைத்து தற்போதைய அரசாங்கம் மிகப் பெரியளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சந்திரிகா குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல அமைப்பாளராக அர்ஜுன ரணதுங்கவை சந்திரிகா அறிவித்துள்ளதன் மூலம், அவர் கட்சியை மீண்டும் கைப்பற்றுவதற்கான போரைத் துவங்கியுள்ளார் என்று கருதப்படுகிறது.
ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனவை சுதந்திரக் கட்சியின் தலைவராக்கும் வரை ஓயமாட்டேன் என்று சந்திரிகா பகிரங்கமாக எச்சரிக்கை வீடுத்திருந்தார்.

இதற்கிடையே, அர்ஜுன ரணதுங்கவை அத்தனகல தொகுதி அமைப்பாளராக நியமிக்கும் அதிகாரம், சந்திரிகா குமாரதுங்கவுக்கு கிடையாது என்று, சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.