Breaking News

மைத்திரியா? மகிந்தவா? 8ம் திகதிக்குப் பின்னரே முடிவு

ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல், எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறும் அதன் பின்னரே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்கிவிருக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  டிசெம்பர் 12இல் நாடாளுமன்றில் கூடி ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.சுமந்திரன் நேற்று தெரிவித்தார்.

அன்றைய தினம் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார்.இறுதி முடிவுக்கு வர முன்னர், மக்கள், உள்ளூராட்சி மன்றங்கள், நாடாளுமன்ற பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கும் என்று த.தே.கூ.வில் சக்திமிக்கவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

'நான் இவ்வாரம் யாழ்ப்பாணம் போகவுள்ளேன். கட்சித்தலைவர்களுடன் வடக்கு-கிழக்கில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுடனும் இதுவிடயமாகப் பேசுவோம். ஆதன் பின்னரே இறுதி முடிவு எடுப்போம் என அவர் கூறினார். 

இறுதித் தீர்மானத்துக்கு வரும் முன்னர் அரசாங்கத்துடன் பல பிரச்சினைகள் குறித்து பேசிவேண்டியுள்ளது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹஸன் அலி கூறினார். 

எப்படியும் அடுத்த திங்கட்கிழமை, வேட்புமனுத் தாக்கல் செய்து முடிந்த பின்னர் தீர்மானம் எடுக்கப்படும். இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக, செயற்குழுவும் உயர்பீடமும் டிசெம்பர் 8ஆம் திகதியின் பின்னர் கூடவுள்ளனர் என அவர் கூறினார். 

எமது மக்களுக்கு பல மனத் தாக்கங்கள் உள்ளன. ஜனாதிபதி உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேல்மட்டத்துடன் பல சுற்றுப் பேச்சு நடத்தினோம். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என நாம் நினைக்கவில்லை என ஹஸன் அலி கூறினார். 

எதிர்ப்பார்த்தவிதமாக கிழக்கு மாகாணத்தில் செயற்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்த விடயங்களெல்லாம் கருத்தில் எடுக்கப்பட்டு, தமது கட்சி தகுந்த தீர்மானத்தை எடுக்கும் என அவர் மேலும் கூறினார்.