10 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை படைத்த கோஹ்லி, ரஹானே
மெல்போர்னில் நடைபெற்று வரும் 3வது டெஸ்டில் சதம் விளாசிய கோஹ்லி, ரஹானே புதிய சாதனையை படைத்துள்ளனர்.
3வது டெஸ்டில் இந்திய வீரர்கள் கோஹ்லி, ரஹானே சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். இவர்கள் இருவரும் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 262 ஓட்டங்கள் குவித்தனர். கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்ணில் இந்திய ஜோடி அடித்த அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும்.
ஒட்டுமொத்தமாக வெளிநாட்டு மண்ணில் ஒரு ஜோடி அதிக ஓட்டங்கள் அடித்ததில் இந்த ஜோடி 4வது இடத்தை பிடித்துள்ளது. 2004ம் ஆண்டு சச்சின்- லஷ்மண் ஜோடி சிட்னியில் 353 ஓட்டங்கள் குவித்து முதலிடத்தில் உள்ளது.
4வது மற்றும் 5வது இடத்தில் களம் இறங்கி இரு வீரர்களும் சதம் அடித்தது இது 4வது முறையாகும். இதற்கு முன் இந்திய வீரர்கள் சவுரங் கங்குலி, சச்சின், லஷ்மண் ஆகியோர் இதுபோல் மூன்று முறை சதம் அடித்துள்ளனர்.அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 1000 ஓட்டங்கள் குவித்த 10வது இந்திய வீரர் கோஹ்லி ஆவார். இவர் இன்றைய சதத்துடன் ஆயிரம் ஓட்டங்களை கடந்தார்.
‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரண்டு அணிகளும் 400 ஓட்டங்களுக்கு மேல் எடுப்பது இது 2வது முறையாகும். இதற்கு முன் 1983ம் ஆண்டு அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதும்போது இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸில் 400 ஓட்டங்களை தாண்டியிருந்தது.
ஒரு தொடரில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 3 சதம் அடித்த இரண்டாவது வீரர் கோஹ்லி. இதற்கு முன் சுனில் கவாஸ்கர் 1977ம் ஆண்டு அவுஸ்திரேலியா தொடரில் மூன்று சதங்கள் அடித்திருந்தார். ஆனால், 4வது வீரராக களம் இறங்கி சதம் அடித்த ஒரே வீரர் இவராவார்.
6 சதங்கள் அடித்து வெளிநாட்டு மண்ணில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கோஹ்லி 6வது இடத்தைப் பெற்றுள்ளார். சச்சின் 18 சதத்துடன் முதல் இடத்திலும், கவாஸ்கர் 15 சதத்துடன் இரண்டாவது இடத்திலும், டிராவிட் 14 சதங்களுடன் 4வது இடத்திலும், லஷ்மண் 8 சதங்களுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.
ஒரு தொடரில் 5வது வீரராக களம் இறங்கி 3 முறை அரை சதத்தை கடந்த வீரர் ரஹானே ஆவார். இதற்கு முன் சவுரவ் கங்குலி 5 இடத்தில் களம் இறங்கி 3 முறை அரை சதத்திற்கு மேல் ஓட்டங்கள் எடுத்துள்ளார்.